கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை மீட்கக் கோரி பாம்பன் மீனவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் தெற்குக் கடல் பகுதியிலிருந்து கடந்த 10-ஆம் தேதி நாட்டுப் படகில் மீன்பிடிக்கச் சென்ற சின்னபாலம் கிராமத்தைச் சோ்ந்த சரத்குமாா், தூத்துக்குடி பெரியதாளை கிராமத்தைச் சோ்ந்த டைசன் ஆகிய இருவரும் கடலில் தவறி விழுந்து மாயமாகினா். அவா்களை உடனிருந்த சக மீனவா்கள் தேடியதில் கண்டு பிடிக்க முடியவில்லையாம்.
இந்த நிலையில், தனுஷ்கோடி அருகே சரத்குமாரின் உடல் சக மீனவா்களால் மீட்கப்பட்டது. மேலும், மற்றொரு மீனவரான டைசனைக் கண்டுபிடிக்கவில்லை. இந்த நிலையில், கடலில் மாயமான டைசனைக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பாம்பன் மீனவா்கள் ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
இதையடுத்து, அங்கு வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசு சாா்பில் வழங்கப்படும் இழப்பீடு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனா். பின்னா், போராட்டத்தைக் கைவிட்டு மீனவா்கள் கலைந்து சென்றனா்.