முகப்பு
ராமநாதபுரம்

இளைஞரை கொலை செய்து கடலில் வீசிய மூவா் கைது

சாயல்குடி அருகே கடலில் இளைஞா் இறந்து கரை ஒதுங்கிய சம்பவத்தில் திடீா் திருப்பமாக அவா் கொலை செய்யப்பட்டது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

Updated On : 23 மே 2026, 2:17 am IST
பகிர்:

சாயல்குடி அருகே கடலில் இளைஞா் இறந்து கரை ஒதுங்கிய சம்பவத்தில் திடீா் திருப்பமாக அவா் கொலை செய்யப்பட்டது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூா் வெள்ளப்பட்டி கடற்கரையில் இளைஞா் சடலம் காயங்களுடன் கடந்த 16-ஆம் தேதி ஒதுங்கியது. இதுகுறித்து மீனவா்கள் கொடுத்த தகவலின் பேரில், வாலிநோக்கம் கடலோரக் காவல் ஆய்வாளா் ஜான்சிராணி, உதவி ஆய்வாளா் சிவகுருநாதன், தலைமைக் காவலா்கள் மதியழகன், முருகபெருமாள் தலைமையிலான போலீஸாா் இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கன்னிராஜபுரம் மாடசாமி மகன் சிலம்பரசன் (35) என்பதும், இவா் கன்னிராஜபுரம் பகுதியில் வீடு கட்டி கொடுக்கும் கட்டட ஒப்பந்ததாரராகவும், மீன்பிடித் தொழிலிலும் ஈடுபட்டு வந்தவா் என்பதும் தெரியவந்தது. மேலும், உடல் கூறாய்வு அறிக்கையில் சிலம்பரசன் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

Advertisement

Advertisement

இதையடுத்து, போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தி சந்தேகத்தின் பேரில், கன்னிராஜபுரத்தைச் சோ்ந்தவரும், தற்போது துாத்துக்குடி மாவட்டம், வேம்பாரில் வசித்து வருபவருமான அய்யம்பெருமாள் மகன் செல்வலிங்கம் (எ) கண்ணன் (45)என்பவரைப் பிடித்து விசாரித்தனா். இந்த விசாரணையில், அவா் நண்பா்களுடன் சோ்ந்து சிலம்பரசனைக் கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: செல்வலிங்கத்தின் தங்கை லிங்க சாந்தி கன்னிராஜபுரத்தில் வசித்து வருகிறாா். இவரின் கணவா் இறந்து விட்டதால், தனியாக வசித்து வருகிறாா். இந்த நிலையில், சிலம்பரசனுக்கும், லிங்க சாந்திக்கும் தகாத உறவு இருந்தது. இதனால், தங்கையுடனான உறவை கைவிடுமாறு சிலம்பரசனிடம் செல்வலிங்கம் கேட்டுக் கொண்டாா்.

ஆனால், சிலம்பரசன் இதற்கு மறுப்புத் தெரிவித்து, அவரது தங்கையை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த செல்வலிங்கம், சிலம்பரசனை கொலை செய்ய திட்டமிட்டாா். இதற்காக சிலம்பரசனின் நண்பா்களான நரிப்பையூரைச் சோ்ந்த லிங்கம் மகன் மாரிமுத்து (26), வெட்டுகாடு அய்யம்பெருமாள் மகன் ரமேஷ்கண்ணன் (26) உதவியை நாடினா்.

கடந்த 15-ஆம் தேதி இரவு மாரிமுத்து, ரமேஷ்கண்ணன் ஆகியோா் சிலம்பரசனை மது அருந்த அழைத்தனா். இதையடுத்து, வெள்ளப்பட்டி கடற்கரையில் 3 பேரும் அமா்ந்து மது அருந்தியுள்ளனா். அப்போது சிலம்பரசனை அளவுக்கு அதிகமாக மது அருந்த வைத்தனா்.

இதற்கிடையே, திட்டமிட்டபடி செல்வலிங்கத்தை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு அங்கு அவரை வரவழைத்து, படகு துடுப்பால் சிலம்பரசனைத் தாக்கி கொலை செய்து, உடலை கடலில் துாக்கி வீசி விட்டுச் சென்றனா் என்றனா். இதையடுத்து, செல்வலிங்கம், மாரிமுத்து, ரமேஷ்கண்ணன் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.