சிவகங்கை

ரேஷன் கடைகளில் ஆள் பற்றாக்குறை!

காரைக்குடி, அக். 5:   ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிப்பது ரேஷன் பொருள்கள். ஆனால் அந்தப் பொருள்களை குறித்த நேரத்தில் வாங்க முடியாமல் ரேஷன் கடைகளுக்கு அலைந்து வருகிறார்கள்

எஸ். மயில் வாகனன்

காரைக்குடி, அக். 5:   ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிப்பது ரேஷன் பொருள்கள். ஆனால் அந்தப் பொருள்களை குறித்த நேரத்தில் வாங்க முடியாமல் ரேஷன் கடைகளுக்கு அலைந்து வருகிறார்கள் காரைக்குடி தாலுகா பொதுமக்கள்.

  ரூ. 1-க்கு ஒரு கிலோ அரிசி, ரூ. 50-க்கு மளிகைப் பொருள்கள் எனத் தேர்தலில் முக்கியத் திட்டங்களாக அறிவித்து ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. அரசு. ஆனால் அதிகாரிகளின் போதிய நடவடிக்கை இல்லாததால் ஆள் பற்றாக்குறையும், ஒருவரே 2 கடைகளுக்கு விற்பனையாளர் என்கிற நிலையும், மக்கள் பொருள்கள் வாங்க முடியாத நிலையைப் பயன்படுத்தி வெளிச்சந்தைக்குப் பொருள்களை அனுப்புகிற முறைகேடும் காரைக்குடி தாலுகாவில் நிலவுகிறது.

  காரைக்குடி தாலுகாவில் 97 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றை சிவகங்கை மாவட்ட மொத்தக் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவை நிர்வகித்து வருகின்றன.

  இக்கடைகளுக்கு விற்பனையாளர், எடையாளர் இருக்க வேண்டும். ஆனால், சில இடங்களில் 2 அல்லது 3 கடைகளுக்கு ஒருவரே விற்பனையாளர் பொறுப்பில் செயல்பட்டு வருவதாக ரேஷன் கார்டுதாரர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் எடையாளர் நியமனம் இல்லாமல் தினக்கூலி அடிப்படையில் சிலர் எடையாளராகச் செயல்படுவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

  கார்டுகளுக்கு உரிய பொருள்கள் சப்ளை இல்லாமலும், அப்படியே பொருள்கள் அனுப்பப்பட்டாலும் அதை வைக்கப் போதிய இடமில்லாமலும் ரேஷன் கடைகள் உள்ளன.

  ரேஷன் கடையின் வேலை நேரம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் காலை வேலை நேரத்தில் மட்டும் கடைகள் திறந்திருப்பதாகவும், பெரும்பாலான கடைகள் மதிய வேலை நேரத்தில் பூட்டிக் கிடப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.

  மண்ணெண்ணெய் விற்பனை நிலையம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரே இடம் என்பதால் வெகு தொலைவில் உள்ளவர்கள் சில மணி நேரம் காத்திருந்து வாங்க வேண்டிய நிலை உள்ளதாக குடும்ப அட்டைதாரர் ஒருவர் தெரிவித்தார்.

  தற்போது ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாத நிலையும், கடந்த ஒரு வருடமாகவே பெரும்பாலான கடைகளில் இருப்பு சரிவர இல்லை எனவும் உரிய சோதனை நடத்தப்படவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

  இதுகுறித்து மனித உரிமைக் கழக நிர்வாகி ஒருவர் கூறியது:

  ரேஷன் கடைகளில் விற்பனையாளர், எடையாளர் கண்டிப்பாக நியமிக்கப்பட வேண்டும். குடும்ப அட்டைகளுக்கு ஏற்ப பொருள்கள் விநியோகமும், அதை இருப்பு வைக்கக் கடைகளில் போதிய இடவசதியும் செய்ய வேண்டும். அதிகாரிகள் மாதந்தோறும் ரேஷன் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும். விற்பனையாகாத பொருள்களை மீண்டும் நிர்வாகத்திடமே விற்பனையாளர் ஒப்படைப்பு செய்யவும், கடைகளின் வெளியில் வைக்கப்பட்டுள்ள பலகையில் பொருள்களின் விலை விவரம், இருப்பு விவரம் எழுதி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  சிவகங்கை மாவட்ட மொத்தக் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை தனி அலுவலர் ஜானகிராமன் கூறியது:

  மாவட்டம் முழுவதும் பாம்கோ பொறுப்பில் உள்ள ரேஷன் கடைகளில், ஒருசில கடைகளில் ஆள் பற்றாக்குறை உள்ளது. அதற்கு ஒரு வாரத்தில் நியமனம் நடைபெறும்.  தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் நடத்தும் ரேஷன் கடைகளுக்கு ஆள் நியமனத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கோரியிருக்கிறார்கள்.

  ரேஷன் கடைகளை சோதனையிடும் பணியில் பறக்கும் படை என்ற பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் குடிமைப் பொருள் வழங்கல் தாசில்தார் கட்டுப்பாட்டிலும் சோதனை நடைபெறும். கடைகளில் இருந்து தேவையான பொருள்கள் அடிப்படையில் ரேஷன் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகிறது என்றார்.

  காரைக்குடி தாலுகா குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் மீரா பரமேஸ்வரி கூறியது:

  ஆள் பற்றாக்குறை இருக்கிறது. ஒவ்வொரு கடைக்கும் விற்பனையாளரை கண்டிப்பாக நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். ஒருவரே 2, 3 கடைகள் எனப் பொறுப்பு உள்ளதைத் தவிர்க்க அவ்வப்போது நடைபெறும் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது ரேஷன் கடைகளில் திடீர் சோதனை நடத்தப்படுகிறது என்றார்.

  காரைக்குடி தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் ஆள் பற்றாக்குறை குறித்து பாம்கோ அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் திருப்புவனம் உள்ளிட்ட சில இடங்களில் உள்ளவர்கள் காரைக்குடி பகுதிக்கு மாறுதல் செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் அந்த மாறுதலை ஏற்கத் தயக்கம் காட்டுகின்றனர். அவர்களை அழைத்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியுள்ளோம். அவர்கள் பணியை ஏற்றாலே ஆள் பற்றாக்குறையை ஓரளவு சரி செய்துவிட முடியும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT