சிவகங்கை

சிவகங்கை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி புகார்

DIN

100 நாள் வேலை கிடைக்கவில்லை, விவசாயக் கடனுக்கு கூடுதல் வட்டி வசூலிப்பு, மானிய விலை வைக்கோல் தரமில்லை என சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சரமாரி புகார் கூறப்பட்டது.
 சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் சு.மலர்விழி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் து.இளங்கோ முன்னிலை வகித்தார். இதில், விவசாயிகள் பலரும் பல்வேறு புகார்களைக் கூறினர்.
 அதன் விவரம்: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில், இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. மாவட்டத்தில் நூறு நாள் வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் பல கிராமங்களில் வேலை வழங்கப்படவில்லை. வேலை வழங்கினால் அதற்கான ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை. அரசுடைமையாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் நகையை அடகு வைத்து பெற்ற விவசாயக் கடனுக்கு கடந்த சில மாதங்களாக அந்த வங்கிகள் கூடுதல் வட்டி வசூலிக்கின்றன என புகார் கூறினர்.
   இதற்கு ஆட்சியர் சு.மலர்விழி அளித்த பதில்: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எந்தெந்த பகுதியில் குடிதண்ணீர் தேவை அதிகம் என ஆய்வு செய்து அந்த பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குடி தண்ணீர் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவை சில பகுதிகளில் செயல்பாட்டிற்கு வந்துவிட்டன. மேலும் உள்ள சில பகுதிகளில் விரைவில் செயல்படுத்தப்படும். சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நூறு நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலை வழங்குவதற்கு அந்தந்த துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் நகையை அடகு வைத்துப் பெற்ற விவசாயக் கடனுக்கு எந்தெந்த வங்கிகள் கூடுதல் வட்டி வசூலிக்கின்றன என்ற விவரத்தை சம்பந்தபட்ட விவசாயிகள் மனு மூலமாக புகார் தெரிவித்தால் அந்த வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 தற்போது மானிய விலையில் வழங்கப்படும் வைக்கோல் தரமற்றதாக இருப்பதால் கால்நடைகள் மிகவும் பாதிப்படைந்து வருவதாகவும், ஆகவே விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வைக்கோலை தரமானதாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயி தண்டியப்பன் கோரிக்கை விடுத்தார்.
    இதைப் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். இதில்,வருவாய் கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட விவசாயத் துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

மஞ்சள், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை உயா்வு

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT