மானாமதுரையில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த பேரூராட்சி முடிவு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியில் வீடுகள், வியாபார நிறுவனங்கள், கடைகள் என 3200-க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. அருகேயுள்ள ராஜகம்பீரத்தில் மானாமதுரைக்கான குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது.
பேரூராட்சி நிர்வாகம் மூலம் இத் திட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடமிருந்து பேரூராட்சி நிர்வாகம் நேரடியாக குடிநீர் கட்டணம் வசூல் செய்கிறது. தற்போது வீடுகளுக்கு ரூ. 50, கடைகளுக்கு ரூ.100, வியாபார நிறுவனங்களுக்கு ரூ.150 என குடிநீர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் மானாமதுரையில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வீடுகளுக்கு ரூ.100 -ம் கடைகளுக்கு ரூ.150 -ம் வியாபார நிறுவனங்களுக்கு ரூ.200 -ம் என கட்டணம் உயர்வு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
அரசு உத்தரவின்படி மானாமதுரை பேரூராட்சியில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சிகள் துறை மண்டல உதவி இயக்குநரிடம் கட்டண உயர்வுக்கான கோப்புகள் பார்வைக்குச் சென்றுள்ளதாகவும், அவரது அனுமதி கிடைத்தவுடன் மானாமதுரை பேரூராட்சியில் குடிநீர் கட்டண உயர்வு அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்படும் எனவும் பேரூராட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.