காரைக்குடி ரயில் நிலையத்தை திருச்சி கோட்டத்துடன் இணைக்கக் கோரிக்கை
காரைக்குடி ரயில் நிலையத்தை திருச்சி ரயில்வே கோட்டத்துடன் இணைக்கவேண்டும் என்று தொழில் வணிகக்கழகத்தினர்
காரைக்குடி ரயில் நிலையத்தை திருச்சி ரயில்வே கோட்டத்துடன் இணைக்கவேண்டும் என்று தொழில் வணிகக்கழகத்தினர் ரயில்வே கோட்ட மேலாளரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
காரைக்குடி தொழில் வணிகக்கழகத் தலைவர் சாமி. திராவிடமணி, செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் அழகப்பன் மற்றும் எஸ். கண்ணப்பன் ஆகியோர் திருச்சிக்குச் சென்று கோட்ட மேலாளரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: காரைக்குடி ரயில்வே சந்திப்பு நிலையம் பட்டுக்கோட்டை, திருவாரூர் ரயில்பாதை திருச்சிக்கோட்டத்திலும், காரைக்குடி - திருச்சி ரயில்பாதை மதுரைக் கோட்டத்திலும் இருப்பதால் வளர்ச்சிப்பணிகள் தாமதமாகிறது. எனவே காரைக்குடி ரயில்வே சந்திப்பு நிலையம் முழுமையாக திருச்சி ரயில்வே கோட்டத்தில் சேர்க்கவேண்டும்.
காரைக்குடி - பட்டுக்கோட்டை அகலப்பாதை நிறைவு பெற்றதால், பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக மதுரை வரை பயணிகள் ரயில் இயக்கப்படவேண்டும். அதேபோல் விருதுநகரிலிருந்து மானாமதுரை, காரைக்குடி வழியில் திருச்சி செல்லும் டெமோ பயணிகள் ரயிலை பட்டுக்கோட்டைக்கும், மறுமார்க்கத்தில் காரைக்குடி வழியில் திருச்சிக்கும் இயக்கவேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.