இந்த வாரம் கலாரசிகன் - 05-04-2026
மகாகவி பாரதியார் மொழிபெயர்த்த ஜகதீச சந்திர போஸ் நிகழ்த்திய 'ஜீவ வாக்கு' உரையின் முழுமையான மூலத்துடன் பதிப்பித்திருக்கிறார் முனைவர் ய. மணிகண்டன்.
மகாகவி பாரதியார் மொழிபெயர்த்த ஜகதீச சந்திர போஸ் நிகழ்த்திய 'ஜீவ வாக்கு' உரையின் முழுமையான மூலத்துடன் பதிப்பித்திருக்கிறார் முனைவர் ய. மணிகண்டன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அந்தப் புத்தகம் குறித்துப் பின்னொரு நாளில் பதிவு செய்கிறேன்.
'ஜீவ வாக்கு' நூலுக்கு பேராசிரியர் முனைவர் ய. மணிகண்டன் எழுதியிருந்த முன்னுரையைப் படித்துவிட்டு, அவரை அழைத்துப் பாராட்டாமல் இருக்க மனம் ஒப்பவில்லை. நான் பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் சொன்ன செய்தியொன்றை இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அது மூதறிஞர் ராஜாஜிக்கும், மகாகவி பாரதியாருக்கும் இடையேயான தொடர்பு குறித்தானது என்பதைவிட தமிழுடன் தொடர்புடையது என்பதுதான் அதன் சிறப்பு.
மூதறிஞர் ராஜாஜியின் தமிழ்ப் பற்று குறித்தும், அவர் தமிழுக்கு ஆற்றியிருக்கும் தொண்டுகள் குறித்தும் பேசப்படுவதில்லை. சொல்லப்போனால், இருட்டடிப்பு செய்யப்படுகிறது. செட்டிநாட்டரசர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாருடன் இணைந்து சென்னையில் தமிழிசைச் சங்கத்தை நிறுவியதிலும், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாருக்கு மணிமண்டபம் எழுப்பியதிலும் ராஜாஜிக்கு மிகப் பெரிய பங்குண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
Advertisement
ஆங்கிலத்தின் தாக்கத்தால் தமிழில் புது வார்த்தைகள் உருவாகாமல் போவதும், ஆங்கில வார்த்தைகள் அதிகமாக ஊடுருவித் தமிழை இல்லாமல் போக வைப்பதும் நிகழும் என்று முதன்முதலில் உணர்ந்து செயல்படத் தொடங்கியவர் மூதறிஞர் ராஜாஜிதான் என்று சொன்னால் பலருக்கும் வியப்பாக இருக்கும்.
''சம்ஸ்கிருதம், உருது உள்ளிட்ட இந்திய மொழி வார்த்தைகளின் கலப்பால் தமிழ் வழக்கொழிந்து விடாது; ஆனால், ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட மேலைநாட்டு மொழிகளின் ஊடுருவலால் தமிழ் மொழியே அழிந்துவிடும்'' என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்பு மூதறிஞர் ராஜாஜி பயந்தது இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
பாரதியார் குறித்த தரவுகளுக்காகப் பேராசிரியர் எடுத்து வந்த முயற்சிக்கு உதவும் வகையில் விருபா டாட் காம் இணையதளத்தை நடத்திவரும் இலங்கைத் தமிழரான டி. குமரேசன், பாரதியார் எழுதிய ஒரு கட்டுரையை அனுப்பிக் கொடுத்திருக்கிறார். அது 1916-இல் சேலத்தில் வழக்குரைஞராக இருந்தபோது ராஜாஜி நடத்திவந்த ஜர்னல் ஆஃப் தமிழ் சயின்டிபிக் டேர்ம் சொûஸட்டி என்கிற இதழில் பிரசுரமாகி இருந்தது.
தமிழில் கலை, அறிவியல் சொற்கள் தேவை என்பதற்காக 1916-இல் ராஜாஜி ஓர் அமைப்பை ஏற்படுத்தி தமிழ் வார்த்தைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தமிழ் அறிவியல் சொற்களுக்காகத் தொடங்கப்பட்டதுதான் அந்த சஞ்சிகை. அதில் சில ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் வார்த்தைகளைக் குறிப்பிட்டு பாரதியார் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அந்த இதழில் வ.வே.சு. ஐயரும் அதேபோலத் தமிழ் வார்த்தைகளை வழங்கி ஒரு கட்டுரை எழுதியிருப்பதாகத் தெரிவித்தார் பேராசிரியர் மணிகண்டன்.
'ராஜாஜியின் அந்தப் பத்திரிகையின் பிரதி எதுவும் கிடைக்கவில்லை, எந்த ஆண்டு வெளிவந்தது என்பதும் தெரியவில்லை' என்று பதிவு செய்திருந்தார் பெ.சு.மணி. இப்போது விருபா குமரேசன் ஐயாவின் முயற்சியால் அந்தப் பத்திரிகையின் இரண்டு இதழ்கள் கிடைத்திருக்கின்றன.
நூறாண்டுக்குப் பிறகு நாம் முன்னெடுத்த சொல் வேட்டை, சொல் புதிது, சொல் தேடல் முயற்சிகளுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது மூதறிஞர் ராஜாஜியின் தமிழ்ப் பணி என்பதை நினைக்கும்போது, அவரது தொலைநோக்குச் சிந்தனை மெய்சிலிர்க்க வைக்கிறது.
நான் மிகவும் மதித்துப் போற்றும், நம்மிடையே வாழும் தமிழறிஞர்களில் புலவர் வே. பதுமனார் முக்கியமானவர். அவர் அவ்வப்போது நமது தமிழ்மணி பகுதிக்கு எழுதி அனுப்பும் கட்டுரைகளால் கவரப்பட்ட ரசிகர்களில் நானும் ஒருவன். தமிழகமெங்கும் உள்ள தமிழறிஞர்களைக் குடியேற்றத்துக்கும், வேலூருக்கும் அழைத்து அவர்
களது அறிவுத் தேடலைப் பகிர்ந்து கொள்ளச் செய்யும் மிகப் பெரிய தமிழ்ப் பணியில் ஈடுபட்டிருக்கும் தமிழ்ச் செம்மல் புலவர் வே. பதுமனாரின் படைப்பு 'மணித்தமிழாரம்'.
இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் 19 கட்டுரைகளும் 'தமிழ்மணி' பகுதியில் வெளியானவை. அவை அச்சுக்குப் போவதற்கு முன்பும், அச்சு வடிவிலும் படித்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது எனது பேறு. இதுதான் எழுத வேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும் என்றெல்லாம் எந்தவிதக் கட்டுப்பாடும் வைத்துக் கொள்ளாமல், அவ்வப்போது தனக்குத் தோன்றியதை எழுத்தாக்கிப் படைத்திருக்
கிறார் பெரியவர் பதுமனார். நாளைய தலைமுறைக்கு இவை குறித்த தகவல்கள் கிடைக்கப் பெறாமல் போய்விடுமோ என்பது அவரது நியாயமான அச்சம்.
'செந்தமிழ்ச் செட்டியார்', 'இலக்கணக் கோட்டை' என்றெல்லாம் போற்றப்படுபவர் பெரும்புலவர் வடிவேலுச் செட்டியார். 'வேதாந்த பாஸ்கரன்' ச.ரத்தினஞ் செட்டியாரிடம் 12 ஆண்டுகள் வேத நூல்களைக் கற்று 'வேத நூல் சாரம்' என்ற நூலை ஆக்கினார் வடிவேலுச் செட்டியார். நூல் நடை கடுமையாக இருந்ததால் அதை எரித்து விடச் சொன்னார் ஆசிரியர் ரத்தினஞ் செட்டியார். சற்றும் தயங்காமல் அதைத் தீக்கிரையாக்கியவர் வடிவேலுச் செட்டியார். அவரது திருக்குறள் உரை இன்றளவும் வியந்து போற்றப்படுகிறது.
வடிவேலுச் செட்டியாரில் தொடங்கி, சங்ககாலப் பெண்பாற் புலவர் பொன்முடியார், வ.உ.சி., அரசஞ் சண்முகனார், ஞானசம்பந்தப் பெருமான் என்று பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கிய கட்டுரைகளுடன் நகர்கிறது புலவர் பதுமனாரின் 'மணித்தமிழாரம்'.
அத்துடன் நின்றுவிடாமல் நிகழ்காலப் பிரச்னைகளையும், நிமிர்ந்து பார்க்க வைத்த கக்கன் உள்ளிட்ட ஆளுமைகளையும் பதிவு செய்கிறது அவரது கட்டுரைத் தொகுப்பு!
உதவி ஆசிரியர் பொருநைவளவன் ஏ. செந்தமிழ்ச் சீனிவாசனின் 'அக்காக்கள் வாழ்ந்த வீடு' கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இந்தக் கவிதையைப் பரிந்துரைத்தார். நானும் அதை ஆமோதித்துப் பதிவு செய்கிறேன்.
அக்கா பிறந்தாள்
அம்மா தாயானாள்
தம்பி பிறந்தான்
அக்கா தாயானாள்...