முகப்பு
தமிழ்மணி

பொய்யடிமை இல்லாத புலவர்

ஏழிசையாய் இசைப் பயனாய் இன்னமுதாய் தன்னுடைய தோழனுமாய் தான்செய்யும் துரிசுகளுக்குடனாகி, அரனான ஆரூரன் அரணாகக் காத்து நிற்கிறார் என்பார் சகமார்க்கத்தில் நின்ற சுந்தரர்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 11:59 AM
கோப்புப் படம்
பகிர்:

ஏழிசையாய் இசைப் பயனாய் இன்னமுதாய் தன்னுடைய தோழனுமாய் தான்செய்யும் துரிசுகளுக்குடனாகி, அரனான ஆரூரன் அரணாகக் காத்து நிற்கிறார் என்பார் சகமார்க்கத்தில் நின்ற சுந்தரர்.

அவர் தொகுத்தளித்த திருத்தொண்டத்தொகை சைவத்தில் அடியார் பெருமை பேசும் தாய்க்களஞ்சியமாக போற்றப்படுகிறது. இது, நம்பியாண்டார் நம்பி கண்ட திருத்தொண்டர் திருவந்தாதி, சேக்கிழார் படைத்த திருத்தொண்டர் புராணம், உமாபதி சிவாச்சாரியர் எழுதிய திருத்தொண்டர் புராண சாரம் போன்ற நூல்களுக்கு மூலம் என்பது யாவரும் அறிந்ததே. அத்தகைய புகழ்மிக்க, 11 பாடல்கள் கொண்ட திருத்தொண்டத்தொகையில் 63 தனியடியார்களையும், 9 தொகையடியார்களையும் பாடியுள்ளார்.

இதில் ஏழாம் பாடலில், 'பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்!' என்று சுந்தரர் கூறியுள்ளது தனியடியார்களையா? தொகையடியார்களையா? என்கிற ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

தரணியில் பொய்மையிலாத் தமிழ்ச் சங்கம் அதில் பரணர், நக்கீரர் முதல் நாற்பத்தொன்பது புலவர்கள் திருஆலவாய் அரன் சேவடிக்கே பொருள் அமைத்து இன்பக் கவிபல பாடும் புலவர்களே! என்று தொகையடியார்களைக் குறிப்பதாக நம்பியாண்டார் நம்பிகளும், அதை வழியொட்டி உமாபதி சிவாச்சாரியரும் 'பொய்யறியா கபிலர், பரணர் உள்ளிட்ட புலவோர் பலர் வளர்த்த செய்யுளின் மது சித்திரமாகத் தெரித்த செம்மையும் மெய்யும் கொண்ட செய்யுள் தொடைகள் மன்றுள் ஆடல் மேவியகோன் இரு தாளில் விரவ அவரருளாலே அமருலகம் கைக்கொண்டார்' என்கிறார்.

சென்ற நூற்றாண்டின் மத்தியில், தமிழறிஞர் பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய 'பொய்யடிமை இல்லாத புலவர் யார்?' என்னும் நூலில் பொய்யடிமை இல்லாத புலவர் என்று சுந்தரர் குறிப்பிடுவது தனியடியார்களையுமல்ல, தொகையடியார்களையும் அல்ல; மாணிக்கவாசகரையே என்று தரவுகளோடு விளக்கியுள்ளார்.

மணிமேகலையாசிரியர் சீத்தலைச் சாத்தனார், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், வெள்ளி வீதியார் போன்றோர் 'பொய்யில் புலவர்' என்று திருவள்ளுவரை தத்தமது செய்யுள்களில் குறிப்பிட்டுள்ளனர்.

திருவள்ளுவரை பொய்யில் புலவர் என்று புலவர்கள் அழைத்ததற்குக் காரணம், அவர் எந்த அரசனையும் புகழ்வித்துப் பாடிப் பரிசில்பெற பாடவில்லை, எந்த மன்னரின் ஆணைக்கும் இணங்கி இதைப் படைக்கவில்லை, மெய்யறிவால் தாம் உணர்ந்து உள்வாங்கி அறிந்தவற்றை உலக நன்மைக்காக, பலவகைப்பட்ட குணங்களும் தொழில்களும் கொண்ட மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரை சந்திக்கிற அல்லது தேவைப்படுகிற அனைத்துக்கும் வழிகாட்டு நூலாகப் பிரதிபலன் கருதாதுப் படைத்துள்ளார்.

1,300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இந்த 'பொய்யடிமையில்லா புலவர்' வரிக்கு உரியவர் யார் என்ற தேடல் இன்றும் தொடர்கிறது.

இந்தக் கேள்விக்கு வேறொரு பாடலில் சுந்தரரே விளக்கம் தருகிறார். 'வேண்டுவோர்க்கு வீடுபேறளிக்கும் அற்புதத் திருத்தலமான திருப்புகலூர் ஆலயத்தில் செங்கற்கள் பொன்கட்டிகளாக மாறிய திருவருள் அதிசயம் நடந்தது. அதையே சான்றாகக் கொண்டு, பூவுலகில் மண்ணாளும் வேந்தர்களைப் புகழ்ந்துபாடி வீணாய் பொழுதைக் கழிக்காமல் புகலூரில் உறைந்துள்ள இறைவனைப் பாடுங்கள், எண்ணியதைப் பெறலாம்' என்கிறார்.

இறை திருவடியைப் பணிந்து பாடுவோர் புகழ்மிக்க புலவர் என்றும், இறைவனைத் தவிர வேறு எவருக்காகவும் சொல் எடுத்து புகழ்பாடுவதற்காக வாய் திறக்காதவர்களை பெரும்புலவர் என்றும் சுட்டுகிறார் சேக்கிழார்.

'பொய்யடிமை செய்பவருள் பொருந்தாதவன், பொய் அஞ்சி வாய்மைகள் பேசி புகழ் புரிந்தார்க்கு அருள்செய்வான், பொய்யர்களை பொய்செய்து விடுவான்' என்று வெவ்வேறு தேவாரப் பாடல்களில் திருநாவுக்கரசர் பொய்மையாளர்களை எடுத்துரைக்கிறார்.

பொய்யில்லாமல் பாடிய புலவர்கள் மெய்யுணர்த்திடும் தன் அனுபவத்தையும், தன்னலம் மற்றும் தற்புகழ்ச்சி கருதாமல் பிறர் நலனையும் பொதுநலனையும் மட்டுமே சிந்தையில் வைத்து உலகோர்க்கு உரைத்துள்ளனர். எடுத்துக்காட்டாக, இரண்டு நூற்றாண்டுக்கு முன்பு பிறந்த இராமலிங்க அடிகளார் வழங்கிய திருஅருட்பா கூறுவது,

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன்

சத்தியஞ்சொல் கின்றேன்.

பாரதியார் தன்னுடைய புதிய ஆத்திசூடியில் 'பொய்ம்மை இகழ்!' என்பார். புலவர்களுக்கு பொய்யுரை தேவையில்லை என்பது அடிப்படைக் கருத்து.

பொய்யான உடம்பு கொண்டவர்கள்தான் அரசரோ, வலியவரோ, வள்ளலோ எவராயினும், இறைவனைப் பாடாமல் இவர்களைப் பாடித்திரிந்து பொருள்பெற்று வாழ்பவர்கள் மெய்யடியவர்கள் பார்வையில், பொய்யடிமை செய்யும் புலவர்கள் என்பது அவர்கள் பாடல் மூலம் கண்ட தெளிவு.

அந்த வகையில், பொய்யடிமை இல்லாத புலவர் மணிவாசகராகவும் இருக்கலாம், அதற்கு முன்போ அல்லது பின்போ வாழ்ந்த அல்லது வாழ இருக்கிற, மும்மலம் அறுத்து உண்மை ஞானம் எய்திய ஒரு புலவராக இருக்கலாம். இப்படி உருவாகின்ற ஒவ்வொரு புலவரும் பொய்யடிமையில்லாத புலவர்களே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments