FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பலனிலாச் செயலால் பயனில்லை

அன்பு கொண்ட நெஞ்சத்தவளாய் தலைவன் மீது மாளாக் காதல் கொண்டிருந்தாள் தலைவி. தலைவனோ தலைவியைக் கருதாமல் வேலையின் காரணமாக எங்கோ இருக்கிறான்.

8 நவம்பர் 2026, 1:07 pm
கோப்புப் படம்
பகிர்:

அன்பு கொண்ட நெஞ்சத்தவளாய் தலைவன் மீது மாளாக் காதல் கொண்டிருந்தாள் தலைவி. தலைவனோ தலைவியைக் கருதாமல் வேலையின் காரணமாக எங்கோ இருக்கிறான். தனிமையில் வாடித் துடித்துக் கொண்டிருந்தாள்.

தலைவனைப் பிரிந்ததால் தலைவி தனிமையில் வருந்துவாள் எனக் கருதிய தோழி, அவளைத் தேற்றும் பொருட்டு சந்திக்கச் சென்று தேறுதல் சொன்னாள்.

தலைவி பிறரால் தேற்ற முடியாத மனநிலையில் இருக்கிறாள். ஆற்றாமையும் அவநம்பிக்கையும் ஏற்பட்ட பின்னர், தலைவியானவள் 'அன்பில்லாத தலைவனை நினைத்து எந்தவொரு எண்ணமும் ஏற்படவில்லை' என்பதைத் தோழியிடம் சொல்வதாக குறுந்தொகை பாடல் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

விடர்முகை யடுக்கத்து விறல்கெழு

சூலிக்குக்

கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்

புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம்

உள்ளலும் முள்ளா மன்றே தோழி

உயிர்க்குயிர் அன்ன ராககலிற் றம்மின்

றிமைப்புவரை யமையா நம்வயின்

மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே.

- (குறுந். 218)

தோழி! உயிருக்கு உயிராய் இருந்தவர் தலைவர். கண் இமைக்கிற அளவு நேரம் கூட பிரிந்திருக்க முடியாத நம்மை மறந்து விட்டு, தாம் சென்ற இடத்தில் தங்கியிருக்கக் கூடிய மனவலிமை கொண்டவராக இருக்கிறார். அவருக்காக கடவுளை வேண்டிக்கொள்ளப் போவதில்லை.

குகைகளை உடைய மலைப் பகுதிக்குச் சென்று துர்கைக்கு பலிக்கடன் செய்யப் போவதில்லை. அவர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கையில் காப்பு நூலைக் கட்டிக்கொள்ளுதலைச் செய்ய மாட்டேன். நல்ல சகுனங்கள் பார்க்க மாட்டேன். அவருக்காக நற்சொல் சொல்பவர்கள் முன் சென்று நிற்கமாட்டேன். இனிமேல் தலைவனை மனதில் நினைக்கவும் மாட்டேன் எனச் சொல்லி முடித்தாள்.

இதன்வழி தலைவன் நலமாக இருக்க நிறைய வழிபாடுகள் இருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. தலைவி வெறுப்பால் எந்தவொரு செயலையும் செய்யப்போவதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கிறாள்.

தலைவனின் மீது அதீத அக்கறையும் அன்பும் கொண்டவள் தலைவி. அந்த அக்கறைக்கு மரியாதையில்லாதபோது, கடவுளை மட்டும் வணங்கி எந்தவொரு பயனும் விளையப் போவதில்லை என்பதைத் தலைவியின் கூற்று வெளிப்படுத்தியுள்ளது. அன்பு என்பது தலைவன் தலைவி இருவரிடமும் இருக்கவேண்டும் என்பதைப் பாடல் உணர்த்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.