முகப்பு
சிவகங்கை

ஜாக்டோ-ஜியோ போராட்டம்: சிவகங்கை மாவட்டத்தில் 22 சதவீதத்தினர் பணிக்கு செல்லவில்லை

சிவகங்கை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை நடத்திய வேலைநிறுத்தப்

Updated On : 23 ஜனவரி 2019, 8:19 am IST
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 22 சதவீதத்தினர் பணிக்குச் செல்லவில்லை.
     தன் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 21 மாத ஊதியக் குழு நிலுவை தொகை உடனடியாக வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால், அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
    அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளிலும்  21,475 பேர் பணியாற்றுகின்றனர். இதில், 15,889 பேர் பணிக்குச் சென்றனர். இவர்களில் 5,079 பேர் பணிக்குச் செல்லவில்லை. 507 பேர் விடுப்பில் சென்றனர். எனவே, சிவகங்கை மாவட்டம் முழுவதும் 22 சதவீதம் அரசு அலுவலர்கள், ஆ சிரியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
தேவகோட்டை
     ஜாக்டோ-ஜியோ சார்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக  வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்களான நாகராஜன், சேவுகமூர்த்தி, அழகப்பன், அதிசயராஜ் ஆகியோர் தலைமையில்  நடைபெற்ற இப்போராட்டத்தில், 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.       
திருப்பத்தூர்
     திருப்பத்தூரில் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டார ஒருங்கிணைப்பாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். முத்துமாரிப்பன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் இளங்கோவன், மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர் சிங்கராயர், பழனியப்பன், கருப்பையா, ஜெகன், மகாலிங்க ஜெயகாந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  
    ஆர்ப்பாட்டத்தில், 250-க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.