சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடந்த ஆடிப்பூர விழாவில் அம்மன் வளையல் அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இவ்விழாவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ஆனந்தவல்லி சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடிப்பூர விழா விமர்சையாக நடைபெறும். இவ் விழாவின்போது அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தி அம்மன் வீதி உலா நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாவில் பங்கேற்று அம்மனை தரிசிக்க வரும் பெண்கள் ஆனந்தவல்லி அம்மனுக்கு அணிவிக்கப்படும் வளையல்களை வாங்கிச் சென்று திருமணமாகாத பெண்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுத்து அணிவிக்கச் செய்வார்கள். இவ்வாறு அந்த வளையல்களை கைகளில் அணிந்து கொண்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடைபெறும். கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.
இந்தாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக கோயில்கள் அடைக்கப்பட்டிருப்பதால் கோயிலில் உற்சவ மூர்த்திகள் இருக்கும் இடத்திலேயே ஆடிப்பூர விழா நடத்தப்பட்டது. உற்சவர் ஆனந்தவல்லி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு பூமாலைகள், வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது.அதைத்தொடர்ந்து ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின்போது பக்தர்கள் யாரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. கோயிலில் உள்ள சிவாச்சாரியார்கள் மட்டும் பூஜைகளை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.