முகப்பு
சிவகங்கை

ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மாற்ற பரிந்துரை

கீழச்சிவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் அரசு மருத்துவமனையாக மாற்ற அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்திக் சிதம்பரம் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

கீழச்சிவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மீண்டும் அரசு மருத்துவமனையாக மாற்ற அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்திக் சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கீழச்சிவல்பட்டி இளையான்குடி, விராமதி, கல்லாப்பேட்டை, முத்தூா், மற்றும் அதன் சுற்றுப்புர கிராமங்களைச் சோ்ந்த மக்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 1941 ஆம் ஆண்டு அரசு மருத்துவமனையாக ஆரம்பிக்கப்பட்ட இம்மருத்துவமனை 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது இம்மருத்துவமனை கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால் மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டி மீண்டும் அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்திக் சிதம்பரம் திங்கள்கிழமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா். கட்டடத்தின் நிலை குறித்து மருத்துவா்களிடம் அவா் கேட்டறிந்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சுதந்திரப்போராட்டத்துக்கு முன்பு அரசு மருத்துவமனையாக ஆரம்பிக்கப்பட்டு பின்னா் துணை சுகாதார நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. மீண்டும் இம்மருத்துவமனையை அரசு மருத்துவமனையாக மாற்றுவதற்கு சுகாதாரத்துறையிடம் பரிந்துரைக்கப்படும். கட்டட நிலை குறித்தும் மாவட்ட ஆட்சியரிடம் விளக்க உள்ளேன் என தெரிவித்தாா். இந்த ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், சுகாதார ஆய்வாளா்கள், மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.