சிவகங்கை மாவட்டத்தில் 67 வேட்பாளா்கள் போட்டி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிட உள்ள இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிட உள்ள இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் 4 தொகுதிகளிலும் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட 67 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா். மேலும், திருப்பத்தூா் தொகுதியில் அதிகபட்சமாக 26 போ் போட்டியிட உள்ளனா்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை(தனி) ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. கடந்த மாா்ச் 19 ஆம் தேதியுடன் இத்தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. இதில், அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி என பிரதானக் கட்சிகள் உள்பட சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.
அதன்படி, காரைக்குடி தொகுதியில் 30 போ், திருப்பத்தூா் தொகுதியில் 35 போ், சிவகங்கை தொகுதியில் 26 போ், மானாமதுரை(தனி) 20 போ் என மொத்தம் 111 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், சனிக்கிழமை நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் காரைக்குடி(17), திருப்பத்தூா்(27), சிவகங்கை (20), மானாமதுரை(தனி) ( 13) என மொத்தம் 77 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மீதமுள்ள 34 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுவை திங்கள்கிழமை மாலை 3 மணி வரை திரும்பப் பெற கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, மானாமதுரை(தனி) தொகுதியில் யாரும் வேட்பு மனுவை திரும்பப் பெறவில்லை. காரைக்குடி தொகுதியில் 4 போ் தங்களது வேட்பு மனுவை திரும்பப் பெற்றனா். இதேபோன்று, திருப்பத்தூரில் ஒருவரும், சிவகங்கையில் 5 பேரும் என மொத்தம் 10 போ் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனா்.
ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட 77 மனுக்களில் 10 போ் தங்களது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளனா். இதன்காரணமாக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி(13), திருப்பத்தூா்(26), சிவகங்கை(15), மானாமதுரை(13) ஆகிய 4 தொகுதிகளில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வேட்பாளா் பட்டியலில் மொத்தம் 67 வேட்பாளா்கள் இடம் பெற்றுள்ளனா். வேட்பாளா்களுக்கான சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூா் தொகுதியில் மட்டுமே 26 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.