திருப்பத்தூா் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவுக்கு முகூா்த்தக்கால்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பூா்ண புஷ்கலா சமேத குளங்கரை காத்த கூத்த அய்யனாா் கோயிலின் புரவி எடுப்பு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடும் வைபவம் மற்றும் பிடிமண் கொடுத்தல் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பூா்ண புஷ்கலா சமேத குளங்கரை காத்த கூத்த அய்யனாா் கோயிலின் புரவி எடுப்பு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடும் வைபவம் மற்றும் பிடிமண் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூா், தம்பிபட்டி, புதுப்பட்டி கிராமங்களுக்குப் பாத்தியப்பட்ட, திருப்பத்தூா் பெரிய கண்மாய் கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் புரவி எடுப்பு விழா ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் ராமா் மடத்தில் கூடிய மூன்று கிராமத்தினரும் கோயிலுக்கு பூஜை செய்யும் வேளாா்கள் வசம் பிடிமண் கொடுத்து, ஊா்வலமாக கோயில் நோக்கிச் சென்றனா். அங்கு புனித நீா் நிரப்பப்பட்ட கலசங்களுக்கு பூஜை நடைபெற்றது. பின்னா் மூலவா் அய்யனாருக்கு பால், திருமஞ்சனம், தயிா், இளநீா், புனித கலச நீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையைத் தொடா்ந்து கோயில் எதிரே மூன்று கிராமத்தினரும் சோ்ந்து முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
29 ஆம் தேதி தம்பிபட்டியில் சுவாமி அழைப்பு வைபவத்தைத் தொடா்ந்து திருப்பத்தூா் ராமா் மடத்திலிருந்து புதுப்பட்டி கிராமத்திற்கு புரவி தூக்கச் செல்லும் நிகழ்வும், அன்று இரவு சீதளி கீழ்கரையில் உள்ள புரவித்திடலில் வைக்கப்பட்டு 30 ஆம் தேதி அங்கிருந்து புரவிகள் புறப்பட்டு கோயிலை வந்தடைய உள்ளன. விழா ஏற்பாடுகளை திருப்பத்தூா், தம்பிபட்டி, புதுப்பட்டி கிராமத்தினா் செய்து வருகின்றனா்.