மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வயலில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்ததால் உயிரிழந்த கட்சி நிர்வாகியின் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதன்கிழமை திடீர் சாலை மறியல் நடைபெற்றது.
மன்னார்குடி அடுத்த மாங்கோட்டை நத்தம் கீழத்தெருவை சேர்ந்த சிபிஐ கிளைச் செயலராக இருந்த இருந்து வந்தவர் சி.இளங்கதிர்(59). செவ்வாய்க்கிழமை இளங்கதிர் வயலில் வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே மின் ஆழ்துளை கிணறு மின் மோட்டாருக்கு செல்லும் மின் கம்பி அறுந்து கிடந்ததை மிதித்ததில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து, திருமக்கோட்டை காவல்நிலைய காவல் துறையினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து இளங்கதிரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த இளங்கதிர் குடும்பத்திற்கு மின்சார வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும். இறுதி சடங்கிற்கு நிதி உதவி அளிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட இளங்கதிரின் சடலத்தை வாங்காமல் மன்னார்குடி அரசு மருத்துவமனை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் உயிரிழந்த இளங்கதிர் உறவினர்கள் திடீரென புதன்கிழமை சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
அங்கு வந்த முன்னாள் எம்எல்ஏ சிவபுண்ணியம், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து, சிபிஐ மாவட்டச் செயலர் வை.செல்வராஜ், ஒன்றியச் செயலர் எம்.செந்தில்நாதன் ,கோட்டூர் ஒன்றியக்குழுத் தலைவர் மணிமேகலை முருகேசன், வல்லூர் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.ரேகா ஆகியோர் மறியலுக்கு ஆதரவு தெரிவித்து மறியலில் கலந்துகொண்டனர்.
இது குறித்து, தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.கே.பாலச்சந்தர், வட்டாட்சியர் த.ஜீவானந்தம், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆ.மதியழகன் ஆகியோர் மறியலில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில்,விரைவில் இளங்கதிர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், உனடியாக இறுதி சடங்குக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கு பரிந்துரை செய்யப்படும் என எழுத்து பூர்வமாக மின்வாரியத்தின் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டதுடன், இறுதி சடங்கு செய்ய இளங்கதிரின் உடலை மருத்துவனையிலிருந்து ஊருக்கு எடுத்து சென்றனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.