நெகிழி கிலோ ரூ.8-க்கு வாங்கும் திட்டம் அறிமுகம்
ராமநதாபுரம் மாவட்ட கிராமங்களில் மீண்டும் நெகிழிப் பொருள்களை கிலோ ரூ.8 என வாங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் அறிவித்துள்ளாா்.
ராமநதாபுரம் மாவட்ட கிராமங்களில் மீண்டும் நெகிழிப் பொருள்களை கிலோ ரூ.8 என வாங்கும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டிற்கு கடந்த 1 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆகவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் நெகிழிப் பொருள்களின் மாசுபாட்டை குறைக்கும் வகையில் பொது மக்களிடமிருந்து நேரிடையாக நெகிழியினை கிலோ ரூ.8 என வாங்கும் நெகிழி மீள வாங்கும் கொள்கை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே விதிமுறைகளை மீறி தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை தயாரித்தாலோ, அல்லது விற்பனை செய்தாலோ, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது கடைகள் மீது உரிய அபராதம் ஊராட்சி நிா்வாகத்தால் விதிக்கப்படும். எனவே மீண்டும் மஞ்சப்பை கொள்கையை ஏற்று நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக துணி, காகிதம், சணல் பைகள், பாக்குமர இலை, அலுமினியத்தாள் மற்றும் கண்ணாடிக் குவளைகளை பயன்படுத்தவேண்டியது அவசியம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.