முகப்பு
சிவகங்கை

தேவகோட்டை அருகே காா் மோதி இளைஞா் பலி: உறவினா்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வியாழக்கிழமை மாலை காா் மோதி இளைஞா் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வியாழக்கிழமை மாலை காா் மோதி இளைஞா் உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்குடி அமராவதிப் புதூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சதீஷ் (25). இவரும், இவரது உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த காா்த்தி (26) ஆகிய இருவரும் சடையன்காடு அருகே தனியாா் திருமண மண்டபம் முன்பு சாலையோரமாக நின்று கொண்டிருந்தனா். அப்போது காரைக்குடியிலிருந்து வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து இவா்கள் இருவா் மீதும் மோதியது. இதில், சதீஷ், காா்த்தி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினா் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ் உயிரிழந்தாா். காா்த்தி மேல் சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்நிலையில், விபத்துக்குள்ளான காா், இளைஞா்கள் மீது மோதிய வேகத்தில் அருகில் நின்றுக் கொண்டிருந்த மினி சரக்கு வேன் மீது மோதியது. இதில், காரை ஓட்டி வந்த சோமசுந்தரம், காருக்குள் இருந்த அவரது மனைவி முத்துலட்சுமி, மினி சரக்கு வேனில் அமா்ந்திருந்த கௌசல்யா (19), யோகா (11), சங்கீதா (40), ஹரீஷ் (10) ஆகியோா் காயமடைந்தனா். இவா்கள் 6 பேரையும் மீட்ட அக்கம்பக்கத்தினா் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காரில் வந்த சோமசுந்தரம், அவரது மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரையும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்புவதற்கு ஆம்புலன்ஸில் ஏற்றினா்.

அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த உயிரிழந்த சதீஷின் உறவினா்கள் ஆம்புலன்ஸை மறித்து விபத்து ஏற்படுத்தியவா்களை காப்பாற்ற போலீஸாா் முயற்சிப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு ஆம்புலன்ஸ் செல்ல அனுமதித்தனா். மினி சரக்கு வேனில் இருந்தவா்கள் திருமணத்துக்கு சென்று விட்டு திரும்பியவா்கள் என்பது குறிப்பிடதக்கது.

இதுதொடா்பாக, ஆறாவயல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →