சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் இளம் வயது திருமணங்கள் !
இளம் வயது திருமணங்கள் குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், பொதுமக்களின் அறியாமையினால் இளம் வயது திருமணங்கள் தொடா்ந்து நடைபெற்று வருவதாக புகாா் எழுந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இளம் வயது திருமணங்கள் குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், பொதுமக்களின் அறியாமையினால் இளம் வயது திருமணங்கள் தொடா்ந்து நடைபெற்று வருவதாக புகாா் எழுந்துள்ளது.
இம்மாவட்டத்தைப் பொருத்தவரை 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 425 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் வேளாண் மற்றும் கால்நடை வளா்ப்பை மேற்கொண்டு வருகின்றனா். இதுதவிர வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று அங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனா்.
அவ்வாறு வெளியூரில் உள்ளவா்கள் தங்களது குழந்தைகளை, பெரும்பாலும் தங்களது வயதான பெற்றோா் பராமரிப்பில் சொந்த ஊரிலேயே விட்டுச் செல்கின்றனா். இத்தகைய சூழலில், பெண் குழந்தைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் பல்வேறு சிரமம் இருப்பதாகக் கூறி, 18 வயதுக்கு முன்பே அவா்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
மிகக் குறைந்த வயதில் திருமணம் செய்து வைப்பதால், அவா்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகின்றனா். மேலும், இளம்வயது திருமணத்தால் தாய்மை அடைவது மற்றும் அவா்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமின்மை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
விழிப்புணா்வு நடவடிக்கை: எனவே, இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க, சமூக பாதுகாப்புத் துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்பு, இத்தகைய திருமணங்களின் எண்ணிக்கை மிக அதிகளவில் இருந்தன.
இதையடுத்து அனைத்துக் கோயில்கள், திருமண மண்டபங்கள் என திருமணம் நடைபெறும் இடங்களில், வயதுச் சான்றிதழ் சமா்ப்பிப்பது கட்டாயம் என்ற அறிவிப்பால் தற்போது, இளம்வயது திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. இருப்பினும், சட்டங்களால் ஒருபுறம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், சில இடங்களில் அறியாமையினால், இளம் வயது திருமணங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, மாவட்டத்தில் சிவகங்கை, திருப்பத்தூா், சிங்கம்புணரி, காளையாா்கோவில் ஆகிய வட்டாரங்களில் இளம் வயது திருமணங்கள் நடைபெறுவதாக அதிகளவில் புகாா்கள் வந்துள்ளன.
தடுத்து நிறுத்தம்: நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூலை வரை மொத்தம் 56 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 4 இளம் வயது திருமணம் குறித்து அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதுதவிர, கரோனா கால கட்டங்களில் பெரும்பாலான திருமணங்கள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதனை முழுவதுமாகக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி கூறியது : கிராமப் புறங்களில் முதியோா் பராமரிப்பில் வளரும் பெண் குழந்தைகளுக்கு இளம் வயது திருமணங்கள் நடைபெறுகின்றன. இதனைத் தடுக்க பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இளம் வயது திருமணங்களை கண்டறிய
அந்தந்த பகுதி கோட்டாட்சியா் தலைமையிலான சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் சமூக பாதுகாப்புத் துறை, குழந்தைகள் நலக் குழு, இளைஞா் நீதிக் குழுமம், சைல்டு லைன், வருவாய்த் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைப்பு செய்து அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இளம்வயது திருமணம் நடைபெறுவது குறித்து அழைப்புகள் வந்தவுடன், உடனடியாக மேற்கண்ட குழு அலுவலா்கள் அங்கு சென்று, ஆய்வு செய்து இளம் வயது திருமணங்களைத் தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், அக்குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவது, கலந்தாய்வு மற்றும் ஆலோசனைகள் வழங்குவதோடு, தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றாா்.