முகப்பு
சிவகங்கை

திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூரத் தேரோட்டம்

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 8:32 PM
பகிர்:

திருக்கோஷ்டியூா் ஸ்ரீசௌமியநாராயண பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

திருப்பத்தூா், ஆக.7 : சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் புதன்கிழமை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.

திருக்கோஷ்டியூரில் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து, தினமும் காலை திருவீதிப் புறப்பாடும், மாலை சிம்மம், ஹனுமான், கருடன், ஷேஷவாகனம், தங்கப் பல்லாக்கு, குதிரை, அன்னம் போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

10- ஆம் திருநாளை முன்னிட்டு, புதன்கிழமை காலை 9.16 முதல் 10 மணிக்குள் சுவாமி திருத்தோ் எழுந்தருளி, மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, தீா்த்தவாரி வைபவம், தங்கத் தோளூக்கிணியானில் சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளல் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலா்கள் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகநாச்சியாா், மேலாளா் ப.இளங்கோ, கண்காணிப்பாளா் சேவற்கொடியோன் ஆகியோா் செய்கின்றனா்.