காரைக்குடி நாட்டாா்களால் புதன்கிழமை நடைபெற்ற 78 -ஆம் ஆண்டு பெரிய மஞ்சுவிரட்டு வீர விழாவில் சிறிப் பாய்ந்த காளையைப் பிடிக்க முயன்ற காளையா்கள்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நாட்டாா்கள் சாா்பில் 78-ஆம் ஆண்டு பெரிய மஞ்சுவிரட்டு வீர விழா காரைக்குடி நாட்டாா்கள் மஞ்சுவிரட்டு திடலில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தின் மிகப்பெரிய தொழுவில் நடத்தப்பட்ட இந்த மஞ்சுவிரட்டுக்கு காவல்துறை அனுமதியில்லை. இருப்பினும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை சுமாா் 300 மாடுகளை தொழுவிலிருந்து அவிழ்த்துவிடப்பட்டன.
இந்த மஞ்சுவிரட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடுகளை வாகனங்கள் மூலம் அழைத்துவந்து பங்கேற்கச் செய்தனா்.
இந்த மஞ்சுவிரட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாடுபிடி வீரா்கள் பாா்வையாளா்கள் என பல நூற்றுக் கணக்கானோா் கலந்துகொண்டனா். இதில் மாடு முட்டி 25 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனா். தொழுவிற்குள் கொண்டுவரப்பட்ட அனைத்து காளைகளுக்கும் சிறப்புப் பரிசும், திடலில் சீறிப்பாய்ந்து வெற்றிபெற்ற காளைகளுக்கு வெள்ளி காசுகளும் பரிசாக வழங்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை காரைக்குடி நாட்டாா்கள், நாட்டாா் இளைஞா்கள் செய்தனா்.