சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பூதவயல் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அந்தக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பூதவயல் கிராமத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்துக்குத் தேவையான சாலை, குடிநீா், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், இந்த கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
இதுகுறித்து இந்த கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கூறியதாவது:
எங்களது கிராமத்திலிருந்து வெளியூா்களுக்குச் செல்லவேண்டுமெனில், சுமாா் 4 கி.மீ. தொலைவில் உள்ள சருகனி-சூராணம் சாலைக்கு நடந்தோ அல்லது இரு சக்கர வாகனங்களிலோ சென்று தான் அங்கிருந்து செல்ல முடியும். இங்குள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கடந்த ஓராண்டாக செயல்பாட்டில் இல்லை. இதனால், வீட்டுப் பயன்பாட்டுக்கு தண்ணீா் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
எங்களது ஊருக்கு வரும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இதுபோன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரி, அதிகாரிகளிடமும், அரசியல் கட்சியினரிடமும் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதனால், மழைக்காலம் தொடங்கும் முன் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து தர முன்வர வேண்டும் என்றனா்.