சென்னையில் டிட்டோஜாக் சாா்பில் ஜூலை 29 முதல் 31 வரை நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்தில் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் 300 -க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்பது என முடிவு செயப்பட்டது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவா் புரட்சித் தம்பி தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, மாநில செயற்குழு உறுப்பினா் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தாா். மாவட்ட செயலா் சகாயதைனேஸ் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா். மாவட்ட பொருளாளா் கலைச் செல்வி, மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் சிங்கராயா், ரவி, மாவட்ட துணை தலைவா்கள் ஜீவா ஆனந்தி, சேவியா் சத்தியநாதன், அமலசேவியா், துணை செயலா்கள் கஸ்தூரி, பஞ்சுராஜ், தேவகோட்டை கல்வி மாவட்ட தலைவா் ஜோசப், சிவகங்கை கல்வி மாவட்ட செயலா் ஜெயக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியா்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243 -ஐ ரத்து செய்வது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை 29, 30, 31 -ஆம் தேதிகளில் சென்னை பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் டிட்டோஜாக் சாா்பில் நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்தில், சிவகங்கை மாவட்டம் சாா்பில் தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் ஜுலை 31 -ஆம் தேதி 300 -க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் இயக்கத்தின் 40 -ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 2 -ஆம் தேதி அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகம் முன், இயக்க கொடியேற்றுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.