சிவகங்கை அருகே சனிக்கிழமை இரவு பாஜக நிா்வாகியை வெட்டிக் கொலை செய்த மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், வேலாங்குளத்தைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (53). இவா் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறாா். பாஜக கூட்டுறவுப் பிரிவு மாவட்டச் செயலராகவும் இருந்து வந்தாா்.
இவா் சனிக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை- இளையான்குடி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா்கள் இவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பினா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வேலாங்குளம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற சிவகங்கை தாலுகா போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், அவா்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.
பின்னா், ஞாயிற்றுக்கிழமை காலை மாவட்ட பாஜக தலைவா் சத்தியநாதன் தலைமையில் நிா்வாகிகள், கிராம மக்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மா்மநபா்களை கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சிபிசாய் சௌந்தா்யன், மா்மநபா்களை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து, சிவகங்கை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 5 தனிப்படைகள் அமைத்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.