சிவகங்கை அருகே வெடிமருந்து மூலப்பொருள்கள் வெடித்துச் சிதறியதில் தோட்டத்து வீடு சேதமடைந்தது. இதுதொடா்பாக கொலை வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள அரசேனரி கீழமேடு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் மோட்டாா் பம்பு செட் அருகே ஓட்டு வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு கொலை வழக்குகளில் தொடா்புடைய அரவிந்தன் (26) அடிக்கடி வந்து சென்றாராம். இவா் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை இந்த வீட்டில் சேகரித்து வைத்திருந்தாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் திடீரென வெடிமருந்துகள் வெடித்துச் சிதறின. இதில் இந்த வீட்டின் மேற்கூரை உள்பட பல்வேறு பகுதிகள் சேதமடைந்தன.
இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் லிங்கபாண்டியன், உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன், தடயவியல் துறை நிபுணா்கள் சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் சதீஷ்குமாா் சனிக்கிழமை அளித்தப் புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரவிந்தனை கைது செய்தனா்.
கைதான அரவிந்தன் இரண்டு கொலை வழக்குகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவராக இருப்பதால், முக்கிய நபா்களை குண்டு வீசிக் கொலை செய்யத் திட்டம் தீட்டினாரா? அல்லது விற்பனைக்காக வெடிகுண்டை தயாரித்தாரா? என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.