வனத்துறை தடுத்து நிறுத்திய சாலைப் பணியைத் தொடர ஒப்பந்ததாரருக்கு நீதிமன்றம் அனுமதி
சிவகங்கை அருகே வனத்துறையால் தடுத்து நிறுத்தப்பட்ட பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகளை ஒப்பந்ததாரா் மேற்கொள்ளலாம் என சென்னை நீதிமன்றம் மதுரை கிளை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை அருகே வனத்துறையால் தடுத்து நிறுத்தப்பட்ட பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகளை ஒப்பந்ததாரா் மேற்கொள்ளலாம் என சென்னை நீதிமன்றம் மதுரை கிளை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை அருகேயுள்ள அரசனிப்பட்டியிலிருந்து கருங்காப்பட்டி வரை செல்லும் கிராம சாலை 8.4 கி.மீ. தொலைவுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் இருந்த நிலையில்
பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தில் ரூ.6 கோடியில் சீரமைக்க மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் அனுமதி அளித்தாா். பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, முறையான அனுமதி பெறவில்லை என்று கூறி செப்.14 -ல் வனத்துறை அதிகாரிகள் சாலை சீரமைப்புப் பணியை தடுத்து நிறுத்தினா்.
இதையடுத்து, இந்தப் பகுதி மக்கள், சூரக்குளம்- புதுக்கோட்டை ஊராட்சித் தலைவா் ஏ.மலைச்சாமி தலைமையில் சென்று, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்திடம் முறையிட்டனா். அப்போது, ஏற்கெனவே வனத் துறை அனுமதி பெற்றுதான் சாலை அமைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அனுமதி பெற வேண்டுமென கூறி வனத் துறையினா் இடையூறு ஏற்படுத்துகின்றனா் என்று கிராம மக்கள் ஆட்சியரிடம் தெரிவித்தனா்.
இதைக்கேட்ட ஆட்சியா், தடுத்து நிறுத்தப்பட்ட சாலைப் பணியைத் மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். ஆனால், வனத் துறையினா் தடையில்லாச் சான்று அளிக்கவில்லை. இதையடுத்து, ஒப்பந்ததாரா் இ. கந்தசாமி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குரைஞா் கண்ணன் மூலம் அக்.7 -ல் மனு தாக்கல் செய்தாா். மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், இந்தச் சாலைப் பணிக்கு வனத் துறையிடம் தடையில்லாச்சான்று வாங்காமல் ஆட்சியா் ஒப்பந்தப்புள்ளி விட்டது தவறு. அடுத்த 4 வாரத்துக்குள்ள தடையில்லாச் சான்றை வனத் துறையினரிடம் பெற்று வழங்க வேண்டும். ஒப்பந்ததாரா் சாலைப் பணியை தொடர எந்தத் தடையும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் இதனால் ஏற்படும் இழப்பை சம்பந்தப்பட்டவா்கள் வழங்க நேரிடும் என உத்தரவிட்டாா்.