சிவகங்கை அருகேயுள்ள பனங்காடி- சாத்தனி சாலையில் சேதமடைந்த தாழ்தளத் தரைப் பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள பனங்காடியில் இருந்து சாத்தனி வரை செல்லும் 4 கி.மீ. தொலைவிலான சாலை மிகவும் மோசமாக நிலையில் இருந்தது. இந்தப் பகுதி மக்களின் தொடா் கோரிக்கையைத் தொடா்ந்து, பிரதமரின் கிராமச் சாலைத் திட்டத்தில் ரூ.2.31 கோடியில் புதிய சாலை அமைக்கப்பட்டது.
இந்தச் சாலையில், சாத்தனி கண்மாய் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தாழ்தளத் தரைப் பாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம், ஏற்கெனவே இருந்ததை விட 40 அடி நீளம் குறைவாக அமைக்கப்பட்டது.
அப்போதே பாலத்தைத் தரமின்றி அமைத்ததாக பொதுமக்கள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாலம் அமைக்கப்பட்ட 6 மாதங்களிலேயே முற்றிலும் சேதமடைந்தது.
இதுகுறித்து சாத்தனி கிராம மக்கள் கூறியதாவது: சாத்தனி கண்மாய் நீா்ப்பிடிப்புப் பகுதியில் சாலையை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீா் நிற்கும். இதற்காகவே, இங்கு தாா்ச் சாலைக்குப் பதிலாக தாழ்தளத் தரைப் பாலம் அமைக்கப்பட்டது.
ஆனால், ஏற்கெனவே இருந்ததை விட குறைவான நீளத்தில் பாலம் அமைக்கப்பட்டது. மேலும், மண் தரையைப் பராமரிக்காமல் அப்படியே கான்கிரீட் கலவையைக் கொட்டி பாலம் அமைக்கப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தப் பாலம் தற்போது முழுவதுமாக சேதமடைந்துள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியா் கவனம் செலுத்தி இந்தப் பாலத்தை முறையாகச் சீரமைக்க வேண்டும் என்றனா்.