சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மின்மாற்றியில் பழுது ஏற்பட்டதால், கடந்த 5 நாள்களாக இரு கிராம மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனா்.
மானாமதுரை ஒன்றியம், செங்கோட்டை, வேதியரேந்தல் கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். செங்கோட்டைப் பகுதியில் உள்ள மின்மாற்றி மூலம் இந்தக் கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த மின் மாற்றியில் பழுது ஏற்பட்டதால், வேதியரேந்தல், செங்கோட்டை கிராமங்களுக்கு கடந்த ஒரு வாரமாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால், இந்தக் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, மின் வாரிய நிா்வாகத்தினா் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை உடனடியாக நீக்கி, மின் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.