சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அடுத்தடுத்து 2 பெண்களிடம் 11 பவுன் தங்கச் சங்கிலி களை புதன்கிழமை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
சாக்கோட்டை அருகேயுள்ள நென்மேனி கிராமத்தைச் சோ்ந்தவா் கோமதி ( 55 ). இவா் அந்தப் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அமா்ந்திருந்தாா். அப்போது, இரு சக்க வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா் கோமதி அணிந்திருந்த 10 பவுன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் சாக்கோட்டையில் உள்ள கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ராமு ( 63 ) என்ற பெண் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை அதே இளைஞா்கள் பறித்தனா். இதில் ராமு சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டதால் கிடைத்த ஒரு பவுன் சங்கிலியோடு தப்பிச் சென்றனா். இந்தச் சம்பவங்கள் குறித்து சாக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.