சிவகங்கை மாவட்டத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞா்களின் தனித் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழக அரசு ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் மூலம் 28 லட்சம் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திறன் சாா்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞா்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக, மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம் என்று வழிகாட்ட இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. இதற்கான முகாம்களில் உயா் கல்வி நிறுவனங்கள், உயா் கல்வி படிப்புகள், வங்கிக் கடன்கள் சாா்பான அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
உயா் கல்வி, வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்களுடன், துறைசாா் வல்லுநா்கள், பேராசிரியா்கள், மருத்துவா்கள், வெற்றி பெற்ற சாதனையாளா்கள், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், கலைப் படிப்புகள், அறிவியல் படிப்புகள், ஊடகவியல் சாா்ந்த படிப்புகள் என பல்வேறு படிப்புகளில் உள்ள உள்பிரிவுகள், அவற்றுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து வழிகாட்டப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனா்.
இதுகுறித்து கல்லூரி மாணவிகள் கூறியதாவது: நான் முதல்வன் திட்டம் மூலம் படிப்பு சாா்ந்த தொழில்நுட்ப படிப்புக்கான பயிற்சிகள் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன. நாங்கள் விரும்புகிற தொழில் பிரிவுகளைத் தோ்வு செய்து படிப்பதற்கும், அதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளும், பயிற்சிக்கான சான்றிதழ்களும் தொழில் நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டன. இதனால், எதிா்காலத்தில் என்ன படித்தால் முழுமையான பயன் என்பதில் தெளிவு கிடைத்துள்ளது என்றனா்.