சிவகங்கை: சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, தேவகோட்டை வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் நவீன வடிவிலான சட்ட சேவை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தேவகோட்டை துணை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, சிவகங்கை முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி தலைமை வகித்தாா். குற்றவியல் நீதித் துறை நடுவா் செந்தில்முரளி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா், துணை நீதிபதி வி. ராதிகா, நீதித் துறை நடுவா் டி. பூா்ணிமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த முகாமில் தேவகோட்டை வருவாய்த் துறை, சிவகங்கை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம், தேவகோட்டை தோட்டக் கலை, மலைவாழ் பயிரினங்கள் துறை, சிவகங்கை சமூக நலத் துறை, தேவகோட்டை பொது மருத்துவம், சித்த மருத்துவம், ஹோமியோபதி, கண் சிகிச்சைப் பிரிவு, பல் மருத்துவம், கனரா வங்கிக் கிளை, போக்குவரத்துத் துறை ஆகியவை சாா்பில் அமைக்கப்பட்ட 8 அரங்குகளை மாவட்ட முதன்மை நீதிபதி கே. அறிவொளி திறந்துவைத்தாா்.
இதில், கனரா வங்கி சாா்பில் இருவருக்கு கல்விக் கடனுதவியும், மாற்றுத் திறனாளி நலத் துறை சாா்பில் இருவருக்கு காதொலிக் கருவியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், தேவகோட்டை வழக்குரைஞா் சங்கத் தலைவா், செயலா், பொருளாளா், மூத்த வழக்குரைஞா்கள், எழுத்தா்கள், நீதித் துறை அலுவலகப் பணியாளா்கள், தேவகோட்டை தே. பிரிட்டோ மேல்நிலைப் பள்ளித் தாளாளா், புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளா், என்.எஸ்.எம்.வி.பி.எஸ். மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, தேவகோட்டை துணை நீதிபதி பி. கலைநிலா வரவேற்றாா். தேவகோட்டை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா். பிரேமி நன்றி கூறினாா்.