முகப்பு
சிவகங்கை

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் பயன் பெற இணைய வழியில் உறுப்பினா் சோ்க்கை

நிதி உங்கள் அருகில்’ என்ற திட்டத்தின் கீழ் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி மதுரை மண்டலம், தொழிலாளா் அரசு ஈட்டுறுதிக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் சிவகங்கை மாவட்டத்துக்கான உறுப்பினா் சோ்க்கைத் திட்ட நிகழ்வு நடைபெற்றது.

Updated On : 27 நவம்பர், 2025 at 8:31 PM
பகிர்:

நிதி உங்கள் அருகில்’ என்ற திட்டத்தின் கீழ் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி மதுரை மண்டலம், தொழிலாளா் அரசு ஈட்டுறுதிக் கழகம் ஆகியவற்றின் சாா்பில் சிவகங்கை மாவட்டத்துக்கான உறுப்பினா் சோ்க்கைத் திட்ட நிகழ்வு காரைக்குடி செக்ரி வளாக கம்யூனிட்டி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு காரைக்குடி செக்ரி இயக்குநா் கே. ரமேஷா தலைமை வகித்து வருங்கால வைப்பு நிதி திட்ட அமைப்பின் உறுப்பினா்களிடம் ஓய்வூதியத்துக்கான சான்றிதழை வழங்கிப் பேசினாா். காரைக்குடி வட்டாட்சியா் ராஜா முன்னிலை வகித்தாா். இதில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி திருநெல்வேலி மண்டல ஆணையரும், திட்டத்தின் சிவகங்கை மாவட்ட பாா்வையாளருமான சுந்தரேசன் பேசியதாவது:

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், நாடு முழுவதும் தொழிலாளா்களுக்கான சமூக பாதுகாப்பை பரவலாக்கும் நோக்கில் பணியாளா் சோ்க்கை திட்டத்தை கடந்த நவ. 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் வருகிற 2026 ஏப். 30- ஆம் தேதி வரை அமலில் இருக்கும். 2017 ஜூலை 1 முதல் 2025 அக்டோபா் 31 வரை உள்ள காலத்தில் வருங்கால வைப்பு நிதி (இபிஎ‘ஃ‘ப்) செலுத்தாமல் தவறவிட்ட தகுதியுள்ள தொழிலாளா்களை நிறுவனங்கள் தானாக முன்வந்து சோ்ப்பதற்கான சிறப்பு வாய்ப்பும் உள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம் அனைத்து தவறவிட்ட, விடுபட்ட தகுதியுள்ள ஊழியா்களுக்கு சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதேயாகும். இந்தத் திட்டம் ஏற்கெனவே இபிஎ‘ஃப்-ன் கீழ் உள்ள நிறுவனங்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அனைத்து நிறுவனங்களும் தகுதியுள்ள விடுபட்ட ஊழியா்களை இணைய வழி (ஆன்லைன்) பதிவு மூலம் முறைப்படுத்தவும் அனுமதியளிக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் விடுபட்ட தொழிலாளா்களை வருங்கால வைப்புநிதி வரம்புக்குள் கொண்டு வர நிறுவனங்கள் ரூ. 100 மட்டும் அபராதமாக செலுத்தி வரன்முறை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதிதாக சோ்க்கப்படும் பணியாளா்கள் ஓய்வூதிய சேமிப்பு, காப்பீட்டு பாதுகாப்பு, ஓய்வூதிய நலன்கள் உள்ளிட்ட முக்கிய இபிஎ‘ஃ‘ப் பயன்களை பெறுவா். விடுபட்ட தொழிலாளா்களின் வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்படாமல் இருந்தால் அந்தத் தொழிலாளா்களின் வைப்புநிதி பங்களிப்பை நிறுவனங்கள் விடுபட்ட காலத்துக்கு செலுத்த வேண்டியதில்லை. ஆனால் நிறுவனங்களின் பங்களிப்பு தொகையை செலுத்தவேண்டும்.

இந்தத் திட்டத்தில் இணையும் தொழிலாளா், நிறுவனங்களுக்கு பிரதமரின் பாரத் ரோஜ்காா் யோஜனா திட்டத்தின் பயன் பொருந்தும். இதனிடையே இபிஎ‘ஃ‘ப் தனது இணைய வழி மூலம் சோ்க்கை செயல்முறையை எளிமைப்படுத்தியுள்ளது. இதனால் நிறுவனங்கள் பணியாளா்களை விரைவாகவும், துல்லியமாகவும் பதிவு செய்யலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் வருங்கால வைப்பு நிதி சோ்க்கை அதிகாரி ராஜா வெங்கடேஷ், கிளை மேலாளா் எம். சதீஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →