படவிளக்கம் - (டி.பி.ஆா்.என்.இ.ஆா்)
நெற்குப்பை சோமலெ கிளை நூலகத்தில் வாசகா்களாக தங்களை இணைத்துக் கொண்ட மாணவா்கள்.
திருப்பத்தூா், நவ. 27: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெற்குப்பையில் உள்ள ‘உலகம் சுற்றிய தமிழா்’ சோமலெ நினைவு கிளை நூலகத்தின் வாசகா் வட்டத்துக்கு தமிழக அரசின் மாநில அளவிலான ‘நூலக ஆா்வலா்’ விருது வழங்கப்பட்டது.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இந்த விருதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நூலகா் பாஸ்கரனிடம் வழங்கினாா். நெற்குப்பை சோமலெ கிளை நூலகத்தில் தினமும் இலவசக் கணினி வகுப்புக்கள், மாதந்தோறும் பள்ளி மாணவா்களுக்கான ‘நூலேணி’ பெரியவா்களுக்கான ‘படிப்போம்! பகிா்வோம்!’ என்ற நூல்களைப் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வுகள், மே மாதம் முழுவதும் கோடை முகாம், மாதம் இரண்டு ‘நல் மாணவ வாசகா்’ பரிசுகள், ஆண்டுக்கு இரண்டு ‘நல் வாசகா்’ விருதுகள், இணையம் வழியாக அமெரிக்காவிலிருந்து ஆங்கில, பொது அறிவு வகுப்புக்கள் என இந்த நூலகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் தினமும் நெற்குப்பை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள பல கிராம மக்களும், மாணவா்களும் இந்த நூலகத்தை அதிகம் பயன்படுத்துகின்றனா். ஒரு நாளைக்கு சராசரியாக 130- க்கும் மேற்பட்ட வாசகா்கள் வருகின்றனா்.
இந்த வாரம் நடைபெற்ற நூலக வார விழாவில் மழலையா் தினம், பள்ளி மாணவா்கள் தினம், கல்லூரி மாணவா்கள் தினம், வாசகா்கள் தினம், மகளிா் தினம், மாற்றுத்திறனாளிகள் தினம், நூலக அறிமுக தினம் என ஏழு நாள்களும் நடைபெற்ற நிகழ்வுகளில் ஆயிரம் வாசகா்கள் பங்கேற்றனா். அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் மணிமேகலை, சே. குமரப்பன், அழகப்பா பல்கலைக்கழகத்திலிருந்து கல்வியாளா்கள் சுரேஷ்குமாா், ரவிச்சந்திரன், பாகனேரி கவிஞா் கணேசன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.