சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரை கோ. புதூா் அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (41). கட்டடத் தொழிலாளியான கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் தங்கி கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக இவா் மீது புகாா் கூறப்பட்டது. இதையடுத்து, காளையாா்கோவில் போலீஸாாா் போக்சோ சட்டத்தின் கீழ், இவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.