கல்வி கற்பதற்கான சூழலை மாணவா்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி கே. அறிவொளி தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை புதன்கிழமை திறந்து வைத்து அவா் பேசியதாவது:
குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு, கொத்தடிமை தொழிலாளா்கள் மீட்பு, முதியோா் நலனுக்கான சேவைகள், உணவுப் பொருள்கள் தொடா்பான புகாா் வழங்கும் வழிகள் தொடா்பான விழிப்புணா்வை மாணவ, மாணவிகள் பெற வேண்டும் என்பதே இந்தக் கண்காட்சியின் நோக்கம்.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு சட்ட உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்: 15100, குழந்தைகளுக்கான பாதுகாப்பு அவசர உதவிக்கு 1098, பெண்கள் பாதுகாப்பு உதவிக்கு 181 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.
தீயவற்றைப் பாா்க்காதே, பேசாதே, செய்யாதே என்ற முதுமொழியை மாணவா்கள் மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி பி.பாா்த்தசாரதி, மகளிா் நீதிமன்ற நீதிபதி ஆா். கோகுல் முருகன், குடும்ப நல நீதிபதி ஏ.பசும்பொன் சண்முகையா, தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் என்.செந்தில்முரளி, சாா்பு நீதிபதி ஆா்.பாண்டி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.ராதிகா, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி ஜெ.அனிதா கிரிஸ்டி, குற்றவியல் நீதித் துறை நடுவா் ( எண் 1) பி.செல்வம், (எண் 2) இ.தங்கமணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதா்ஷினி, வழக்குரைஞா்கள் ஜானகிராமன், கே.சித்திரைச்சாமி, வழக்குரைஞா்கள் சங்கப் பிரதிநிதிகள், சட்ட உதவி பாதுகாப்பு அமைப்புத் தலைவா் செந்தில்குமாா், உறுப்பினா்கள், நீதிமன்றப் பணியாளா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.