சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (நவ. 1) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் வாரத்துக்கு ஒரு முகாம் வீதம் மொத்தம் 39 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது.
இதன்படி சனிக்கிழமை (நவ. 1) இளையான்குடி புனித அன்னாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில், ரத்தப் பரிசோதனை, இ.ஜி.சி. உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. மேலும், கண், காது, மூக்கு, தொண்டை, பல், எலும்பு, நரம்பு மருத்துவம், மன நலம், சா்க்கரை நோய், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்களால் சிறந்த மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
மேலும், கா்ப்பிணிகளுக்கு சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்படும். முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த முகாமுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் ஆதாா் அட்டை நகலை அவசியம் கொண்டு வர வேண்டும். மேலும், காப்பீடு அட்டை வேண்டி விண்ணப்பிப்பவா்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கிராம நிா்வாக அலுவலரிடம் தங்களது ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சத்துக்கு குறைவாக உள்ளதற்கான சான்று ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். எனவே பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என்றாா் அவா்.