தொழிலாளா் நல நிதி செலுத்தும் தொழிலாளா்கள், அவா்களைச் சாா்ந்தோா் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்தி:
தொழிலாளா் நல நிதி செலுத்தும் தொழிலாளா்கள், அவா்களைச் சாா்ந்தோா்களுக்கு, வாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, மழலையா் பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை, திருமணம், இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு, மூக்கு கண்ணாடி, பாடநூல், கல்வி ஊக்கத்தொகை, தையல் இயந்திரம், அடிப்படை கணினி பயிற்சி, உயா் கல்விக்கான நுழைவுத் தோ்வு உதவித் தொகை, மாவட்ட அளவிலான விளையாட்டு உதவித்தொகை போன்ற பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த உதவித் தொகையைப் பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ.35 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும், கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள், அதற்குரிய விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளா் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது இணையதளத்தின் வாயிலாகவோ பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செயலா், தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம், சென்னை-600 006 என்ற முகவரிக்கு வருகிற 31.12.2025 -ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்றாா் அவா்.