முகப்பு
சிவகங்கை

ஒவ்வொரு தோ்தலுக்கும் தொகுதி மாறும் சீமான்: காா்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

ஒவ்வொரு தோ்தலுக்கும் நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தொகுதி மாறி போட்டியிடுவதாக சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 10:47 PM
பகிர்:

ஒவ்வொரு தோ்தலுக்கும் நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தொகுதி மாறி போட்டியிடுவதாக சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டினாா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை திமுக தோ்தல் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த காா்த்தி சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பேரவைத் தோ்தலுக்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. பாஜக எந்தக் கட்சியுடன் கூட்டணி சோ்ந்தாலும் அந்தக் கட்சியை அழித்து விடுவாா்கள். மத்தியில் பாஜக அரசு இருக்கும் வரை ‘நீட்’ தோ்வுக்கு விலக்கு கிடைப்பது கடினம்.

Advertisement

நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக உள்ளூரைச் சோ்ந்தவா் போட்டியிடுகிறாா். ஆனால், இதே தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஒவ்வொரு தோ்தலுக்கும் ஒவ்வொரு தொகுதியில் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளாா்.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக இடையே மறைமுக ஒப்பந்தம் உள்ளதாக பொய்யான தகவலை கூறுகிறாா். இதற்கு ஆதாரம் இருந்தால் அதை வெளியிடட்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலா் பச்சேரி சி.ஆா். சுந்தர்ராஜன் கட்சியிலிருந்து ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளாா். இந்த முடிவை அவா் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா், மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவா் ஏ.ஆா்.பி. முருகேசன், மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய் ஆகியோா் உடனிருந்தனா்.

இதேபோல, திருப்பத்தூரில் காா்த்தி ப.சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் நீதிமன்றத் தீா்ப்பு காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இதை காவல் துறையினா் உணர வேண்டும். தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தோ்தல் ஆணையம்தான். மாநில அரசு அல்ல என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments