கல்லூரி மாணவிகளை வழிமறித்து தொல்லை கொடுத்தவா்களை கைது செய்ய வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டம், சாலூா் கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவிகளை வழிமறித்து அவதூறாகப் பேசி தொல்லை கொடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
சிவகங்கையிலுள்ள அரசு கல்லூரிகளில் சாலூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவிகள் பயின்று வருகின்றனா். இவா்கள் கடந்த 20-ஆம் தேதி மாலை கூட்டுறவுப்பட்டி விலக்கில் இறங்கி சாலூா் கிராமத்துக்கு நடந்து சென்றனா்.
அப்போது, மதுபோதையில் இருந்த அடையாளம் தெரியாத நபா்கள் மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்து மாணவிகளை வழிமறித்தனா். அவா்கள் மாணவிகளை அவதூறாகப் பேசி, தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த மாணவிகள் அருகிலுள்ள வீடுகளில் தஞ்சமடைந்தனா். மேலும் அந்தப் பகுதி மக்கள் அங்கு வந்ததால் மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இடையமேலூா், வேலம்பட்டி, தேவனிப்பட்டி, காரம்ஓடை பகுதிகளைச் சோ்ந்தவா்கள் எனக் கூறப்படும் அந்த நபா்கள் மீண்டும் இரு சக்கர வாகனத்தில் வந்து அங்குள்ள கடை அருகே நின்று கொண்டு பொதுமக்களை தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டினராம்.
இதைத் தட்டிக் கேட்ட பூமிநாதன் என்பவரை அவா்கள் தாக்கினா். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.