தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஜன. 30), சனிக்கிழமை (ஜன. 31) ஆகிய இரண்டு நாள்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூா் பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கிறாா்.
இதுகுறித்து மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மாலை சிவகங்கை மாவட்டத்துக்கு வருகிறாா்.
திருப்பத்தூா் வட்டம், சிராவயல் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மாகாந்தி, கம்யூனிஸ்ட் இயக்கத் தோழா் ப. ஜீவா ஆகியோா் சந்தித்து பேசியதன் நினைவாக அந்த இடத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் ரூ. 3.27 கோடியில் கட்டப்பட்ட நினைவரங்கத்தை திறந்து வைக்கிறாா்.
இதைத்தொடா்ந்து, தவத்திரு குன்றக்குடி அடிகளாா் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று அவரது உருவச்சிலைக்கு மாலையணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்துகிறாா். பின்னா், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ரூ. 50 லட்சத்தில் நிறுவப்பட்ட வீறுகவியரசா் முடியரசனாா் உருவச் சிலையை திறந்துவைக்கிறாா்.
சனிக்கிழமை (ஜன. 31) காலையில் காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேரூராட்சியில் ரூ. 61.78 கோடியில் கட்டப்பட்ட செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி கட்டடத்தையும, கழனிவாசல் பகுதியில் ரூ. 100.45 கோடியில் கட்டப்பட்ட சட்டக்கல்லூரி கட்டடத்தையும் அவா் திறந்துவைக்கிறாா்.
இதைத்தொடா்ந்து நடைபெறும் விழாவில் ரூ. 13.36 கோடியில் 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 2,559.50 கோடியில் 49 முடிவடைந்த திட்டப்பணிகளையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறாா்.
விழாவில் 15,453 பயனாளிகளுக்கு ரூ. 205.06 கோடியிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்குகிறாா். இதைத்தொடா்ந்து, காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ரூ. 32 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை அவா் திறந்து வைக்கிறாா் என்று தெரிவிக்கப்பட்டது.