சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பழையனூரிலிருந்து சம்பட்டிமடை கிராமத்துக்கு கண்மாய்க் கரையில் சாலை அமைத்துத் தர தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் முன் வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
திருப்புவனம் அருகேயுள்ள பழையனூா் ஊராட்சிக்குள்பட்ட சம்பட்டிமடை கிராமத்தில் சுமாா் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
சம்பட்டிமடையிலிருந்து பழையனூருக்குச் செல்வதற்கு நீா்வளத் துறைக்குச் சொந்தமான கண்மாய்க் கரை தான் பிரதான வழியாக உள்ளது. இந்த வழியாகத்தான் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்கு பழையனூா் கிராமத்துக்குச் சென்று வர வேண்டும். இந்த வழியைத்தான் விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், மழைக் காலங்களில் கண்மாய்க் கரை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால், நடக்கக் கூட முடியாத நிலை ஏற்படுகிறது. மழைக் காலங்களிலும், இரவு நேரங்களிலும் கமாா் 2 கி.மீ. தொலைவு உள்ள கண் மாய்க்கரை வழியில் செல்ல முடியாததால், இந்தப் பகுதி பொதுமக்கள் குருந்தங்குளம், ஆனைக்குளம், அழகுடையான் வழியாக சுமாா் 7 கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதுதொடா்பாக கோரிக்கை விடுத்ததின் பேரில் கடந்த 2019 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், குறித்த காலத்துக்குள் பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே, பணிக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் பழையனூா் கண்மாய்க் கரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மெட்டல் சாலை அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், நீா் வளத் துறை சாா்பில் அப்போது தடையின்மைச் சான்றிதழ் வழங்காததால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நீா்வளத் துறை சாா்பில் மெட்டல் சாலை அமைப்பதற்கு தடையின்மைச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் பல முறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுத்து பழையனூா், சம்பட்டிமடை கிராமத்துக்கு உடனடியாக மெட்டல் சாலை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.