முகப்பு
தேனி

மணல் திருட்டை தடுக்க அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை

தேனி மாவட்டத்தில்  மணல் திருட்டை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை நடத்தினார். 

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:19 am IST
பகிர்:

தேனி மாவட்டத்தில்  மணல் திருட்டை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை நடத்தினார். 
தேனி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் தனியார் நிலங்களில் மணல் அள்ளுவதற்கு அரசு சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை. மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை சார்பில் நில உரிமையாளர்கள் பெயரில் பட்டா நிலங்களில் மண் அள்ளுவதற்கும், நிலச் சீர்திருத்தப் பணிக்காக காடுகளில் தூசி மணலை அள்ளுவதற்கும் வழங்கப்படும் அனுமதிச் சீட்டை பயன்படுத்தி மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. இதனால், பட்டா நிலங்களில் மண் அள்ள அனுமதி பெற்றவர்கள் மணல் செறிவுள்ள காடுகளில் எந்திரத்தை பயன்படுத்தி 6 மீட்டர் ஆழத்திற்கும் மேல் தோண்டி மணல் அள்ளுகின்றனர். மேலும், அரசுபுறம் போக்கு நிலம், ஓடைகள் மற்றும் மலையடிவாரங்களில் மணல் அள்ளிச் செல்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
தேவதானப்பட்டி, பெரியகுளம், போடி, தேவாரம் ஆகிய பகுதிகளில் மலையடிவரங்களில் குவாரி அமைத்து மணல் கடத்தல் நடந்து வருகிறது.  
நீர்நிலைகள் மற்றும் மலையடிவாரங்களில் தொடர்ந்து மணல் அள்ளுவதால் இப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது. இதே போல, ஆண்பட்டி பகுதியில் மூல வைகை ஆற்றின் நீர்வரத்து ஓடைகளில் இருந்து தடையின்றி மணல் திருட்டு நடந்து வருதாக புகார் எழுந்துள்ளது.
மணல் கடத்தல் விவகாரத்தில் அரசியல் கட்சிப் பிரமுகர்களின் தலையீடு உள்ளதால், மணல் திருட்டை தடுப்பதில் காவல் துறை, வருவாய் துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மணல் திருட்டு குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள புகார்கள் குறித்து தேனியில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் சாம்பசிவம் ஆகியோருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். 
அப்போது, மணல் திருட்டை தடுப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து துணை முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.