முகப்பு
தேனி

தேவாரத்தில் மழையால் சேதமடைந்த பகுதிகளை துணை முதல்வர் ஆய்வு

தேனி மாவட்டம் தேவாரத்தில் மழை மற்றும் யானையால் சேதமடைந்த பகுதிகளை தமிழக துணை

Updated On : 8 அக்டோபர் 2018, 7:48 am IST
பகிர்:

தேனி மாவட்டம் தேவாரத்தில் மழை மற்றும் யானையால் சேதமடைந்த பகுதிகளை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
போடி, தேவாரம் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பெய்த மழையினால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் தேவாரம் பிரம்புவெட்டி ஓடை, பிள்ளையார் ஊத்து ஓடையிலும் காட்டாற்று வெள்ளம் ஓடியதில், தேவாரம் மூனாண்டிபட்டி பகுதியில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
மேலும் கடந்த ஒரு வாரமாக தேவாரம் பகுதியில் ஒற்றை காட்டு யானை "மக்னா' விளை நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருகிறது. இந்த சேதங்கள் குறித்து அறிந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை மூனாண்டிபட்டியில் மழையால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து பிள்ளையார் ஊத்து ஓடையில் தூர் வாரும் பணியை பார்வையிட்டார். மேலும்  யானை புகுந்து சேதப்படுத்தி விவசாய நிலங்களை பார்வையிட்டார். 
பின்னர் அப் பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வடகிழக்கு பருவமழையையொட்டி, மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. தேவாரம் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக பிள்ளையார் ஊத்து ஓடையில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. சின்னதேவிக்குளம் கண்மாய் செல்லும் வழியில் பிள்ளையார் ஓடையில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக மழைநீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வந்துள்ளது. இதனை உடனடியாக சீர் செய்ய உத்தரவிடப்பட்டு, மழைநீர் அகற்றப்பட்டது. அப்பகுதிகளில் உள்ள வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் மற்றும் செடி, கொடிகள் அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தேவாரம் மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் ஒற்றை காட்டு யானை இரை தேடி வனப்பகுதியை விட்டு விளைநிலங்களுக்குள் வந்து செல்கிறது. யானையை பாதுகாப்பான முறையில் பிடித்து வேறு வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வனத்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒற்றை காட்டு யானையால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுத்திட காட்டுப் பகுதிகளுக்குள் அகழி ஏற்படுத்தவும், கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதன் நடமாட்டத்தினை கண்டறிந்து அப் பகுதி பொதுமக்களை எச்சரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஆய்வின்போது தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ..பாஸ்கரன், மாவட்ட வன அலுவலர் கெளதமன், தேனி மக்களவை உறுப்பினர் ஆர்.பார்த்திபன், முன்னாள் எம்.பி. சையதுகான் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.