முகப்பு
தேனி

லோயர்கேம்ப் - குமுளி மலைப் பாதையில் இரு சக்கர வாகனங்களை அனுமதிக்கக் கோரி பால் வியாபாரிகள் சாலை மறியல்

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் - குமுளி மலைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இரு சக்கர

Updated On : 8 அக்டோபர் 2018, 7:48 am IST
பகிர்:

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் - குமுளி மலைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இரு சக்கர வாகனங்களை மட்டும் அனுமதிக்கக் கோரி பால் வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கம்பம் அருகே லோயர்கேம்ப் - குமுளி மலைச்சாலையில் கடந்த செப். 25 இல் பெய்த மழையால் இரண்டாவது முறையாக மண் சரிவு ஏற்பட்டது. 
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. எந்த வாகனங்களும் அவ்வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. 
கம்பம், கம்பம்மெட்டு வழியாக சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் சுற்றி குமுளிக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில்,  பால் விற்பனையாளர்கள் தங்களது இரு சக்கர வாகனத்தில் பால் கேனுடன் வந்து லோயர்கேம்ப்பில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
அப்போது அவர்கள் கூறுகையில்,  6 கி.மீ. தொலைவில் உள்ள குமுளிக்கு 60 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்வதற்குள்  பால் கெட்டு விடுகிறது. இதனால் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே குமுளி மலைச்சாலையில் இரு சக்கர வாகனங்களில் பால் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். 
இதற்கு தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம் என்றனர். குமுளி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அல்போன்ஸ்ராஜா சாலை மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். 
அப்போது, இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு, உயர் அதிகாரிகளிடம் பேசி அனுமதி பெற்று தருவதாக கூறியதால் போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற அவரது வேண்டுகோளையடுத்து, பால் வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.