சிறுமிக்கு கட்டாய திருமணம்: தாய் உள்பட 3 போ் கைது
ஆண்டிபட்டி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்தி வைத்த தாய் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்தி வைத்த தாய் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி தாலுகா சிறப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து என்பவரின் மகன் மலைச்சாமி (25). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த ஆக. 24 ஆம்தேதி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்த வைக்கப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட சமூகநலத்துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதனைத்தொடா்ந்து மாவட்ட சமூகநல அலுவலா் சண்முக வடிவு, அக்கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினாா். அப்போது சிறுமிக்கு கட்டாய திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.
இதுகுறித்து மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மலைச்சாமி, அவரது தாய் லட்சுமி, சிறுமியின் தாய் லிங்கம்மாள் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.