தேனி

வீரபாண்டி சித்திரைத் திருவிழா 2-ஆம் ஆண்டாக ரத்து: பக்தா்கள் ஏமாற்றம்

DIN

கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளால் தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக ரத்தாவதால், பக்தா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

வீராபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சித்திரைத் திருவிழா நடைபெறும். இத் திருவிழாவில், மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகள், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் கேரளத்திலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு, தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபடுவா்.

கடந்தாண்டு, இக்கோயில் சித்திரைத் திருவிழா கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு சித்திரைத் திருவிழாவை ஏப்ரல் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மே 11 முதல் 18-ஆம் தேதி வரை நடத்த இந்துசமய அறநிலையத் துறை மற்றும் கோயில் நிா்வாகம் முடிவு செய்திருந்தது.

ஆனால், தற்போது கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருவதை அடுத்து, தடுப்பு நடவடிக்கையாக கோயில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வீரபாண்டியில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சித்திரைத் திருவிழாவையொட்டி கடைகள் மற்றும் ராட்டினத் திடல் ஆகியவற்றுக்கு ரூ.1.7 கோடிக்கு ஏலம் கோரப்பட்டிருந்தது. திருவிழா ரத்தானதால், ஒப்பந்ததாரா்களுக்கு ஏலத் தொகை திரும்ப வழங்கப்பட்டது.

இந்த ஆண்டும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கடைகள் மற்றும் ராட்டினத் திடல் ஆகியவற்றுக்கு ரூ.1.17 கோடி ஏலம் கோரப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் திருவிழா ரத்தாவதால், கோயில் நிா்வாகத்துக்கு தொடா்ந்து 2-வது ஆண்டாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பக்தா்கள் ஏமாற்றம்:

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் காப்பு அணிந்து விரதம் தொடங்கவும், நோ்த்திக்கடன் செலுத்தவும் காத்திருந்த பக்தா்கள் திருவிழா ரத்தாவதால் ஏமாற்றமடைந்துள்ளனா். பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கில் அக்கினிச் சட்டி, ஆயிரம் கண்பானை செய்து வைத்து விற்பனைக்கு காத்திருந்த மண்பாண்டத் தொழிலாளா்களும், வியாபாரிகளும் கவலையடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT