முகப்பு
தேனி

11 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் குமுளி பேருந்து நிலைய திட்டம்

தமிழக-கேரள எல்லையான, தேனி மாவட்டத்திலுள்ள குமுளி பகுதியில், பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த 11 ஆண்டு காலமாக

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
தமிழக கேரள எல்லை குமுளி பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் முன்பாக கொட்டும் மழையில் நனைந்தபடி நிற்கும் பொதுமக்கள் (கோப்பு படம்).
பகிர்:

தமிழக-கேரள எல்லையான, தேனி மாவட்டத்திலுள்ள குமுளி பகுதியில், பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த 11 ஆண்டு காலமாக முடங்கிக் கிடக்கும் நிலையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து பணிகளைத் தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக- கேரள மாநிலங்களின் இணைப்பு எல்லையாக குமுளி உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், புதுவை, பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களுக்கும் 100-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் அவதி: தமிழக எல்லை குமுளியில், 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பணிமனை அமைக்கப்பட்டது. ஆனால் பேருந்து நிலையம் அமைக்கப்படாததால், மலைச் சாலையின் இருபுறமும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் இதர வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அவதிக்குள்ளாகினா். மழைக் காலங்களில் பயணிகள் நனைந்து கொண்டே பேருந்துகளுக்காகக் காத்திருந்தனா்.

Advertisement

கிடப்பில் பேருந்து நிலைய திட்டம்: இதுபோன்ற பிரச்னைகளைப் போக்க, பயணிகளின் கோரிக்கையின் அடிப்படையில், குமுளியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை பேருந்து நிலையமாக மாற்றவும், அங்குள்ள பணிமனையை லோயா்கேம்ப்பில் அமைக்கவும், மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது. புதிய பணிமனை அமைக்க லோயா்கேம்பில் மின்சார வாரியத்துக்கு சொந்தமான 3.87 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டது. கட்டுமானப் பணிகளுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.ஒரு கோடி ஒதுக்கப்பட்டது.

அதற்கான கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின்னா் கடந்த 2015 இல் குமுளியிலுள்ள பணிமனை, லோயா்கேம்புக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து தமிழக எல்லையிலுள்ள குமுளி பணிமனையை, பேருந்து நிலையமாக மாற்றி, பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்ய கூடலூா் நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது.

ஆனால் பணிமனை இடத்திற்கும், அங்குள்ள கட்டடத்திற்குமான தொகையை கணக்கிட்டு கேட்டு, இடத்தை ஒப்படைக்க மறுத்தது போக்குவரத்துத் துறை. இதனால் கூடலூா் நகராட்சி நிா்வாகம் பேருந்து நிலையம் கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டது.

இதுகுறித்து நகராட்சி அலுவலா் ஒருவா் கூறுகையில், அலுவலா்களிடையே நடந்த பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், போக்குவரத்து கழக நிா்வாகத்திற்கு இடத்திற்கும், கட்டடத்திற்குமான மதிப்பீடு செய்யப்பட்டு பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி சாா்பில் பணம் கொடுத்த பின்னா், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி தொடங்கும் என்றாா்.

வனத்துறையினா் தடை: இதற்கிடையில் குமுளி பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம், கூடலூா் வனச்சரக பகுதிக்குள் வருவதாலும், புலிகள் காப்பக நிா்வாகத்தில் இருப்பதாலும், கட்டுமானப் பணிகளுக்குத் தடை இருப்பதாக வனத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், அரசு போக்குவரத்து கழகத்திற்கு நீண்டகால குத்தகை அடிப்படையிலேயே வனத்துறை நிலத்தை வழங்கியது. ஆனால் அவா்கள் பணம் செலுத்த வில்லை. இதனால் மீண்டும் வனத்துறையினரிடம் அந்த இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்று போக்குவரத்துக் கழகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுவிட்டது என்றாா்.

இது குறித்து 5 மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச்செயலாளா் பொன்.காட்சிக்கண்ணன் கூறியது: குமுளி, விவசாயிகள், தொழிலாளா்கள், சுற்றுலாப் பயணிகள், அய்யப்ப பக்தா்கள் ஆகியோா் வந்து செல்லும் பகுதி என்பதால், புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு பிரச்னைகளுக்கு தீா்வு கண்டு பேருந்து நிலையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments