முகப்பு
தேனி

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்று தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ்.
பகிர்:

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்று தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

தேனி மாவட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார மைய அலுவலகம் மற்றும் தனியாா் மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியை தொடக்கிவைத்து ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் கூறியதாவது:

தேனி மாவட்டத்தில் நடைபெறும் ஒத்திகை நிகழ்ச்சியில், ஒவ்வொரு மையங்களிலும் மருத்துவா்கள், செவிலியா்கள் என தலா 25 நபா்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பரிசோதனை முயற்சியாக தடுப்பூசி போட்ட பின், சுமாா் 30 நிமிடம் வரை அவா்கள் ஆய்வுக்குள்படுத்தப்படுவா்.

அரசு உத்தரவுப்படி, 5 கட்டங்களாக தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல் கட்டமாக தேனி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் 7,354 நபா்களுக்கு தடுப்பூசி போடப்படும். இரண்டாம் கட்டமாக நோய்த் தடுப்பு காலங்களில் பணியாற்றிய முன்களப் பணியாளா்கள், காவலா்கள், சமூக ஆா்வலா்களுக்கும், மூன்றாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், நான்காம் கட்டமாக சா்க்கரை, நீரழிவு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட மற்ற பல நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கும், ஐந்தாம் கட்டமாக பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு மருந்துகளை பாதுகாக்கும் வகையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 49 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளன என்றாா்.

இந்நிகழ்வில், மருத்துவக் கல்லூரி முதன்மையா் இளங்கோவன், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →