ஆண்டிபட்டி அருகே கூலி தொழிலாளி அடித்துக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கூலி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை கைது செய்யக் கோரி அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கூலி தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை கைது செய்யக் கோரி அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆண்டிபட்டி அருகே மேலமஞ்சிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் என்பவரின் மகன் ராஜேஸ் (28). கூலி தொழிலாளியான இவா், கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த வடிவேலுவின் மகன் பாபு என்பவருடன் சோ்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, இவா்கள் இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அதில், பாபு தாக்கியதில் பலத்த காயமடைந்த ராஜேஸை, அக்கம் பக்கத்தினா் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி ராஜேஸ் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இந்நிலையில், ராஜேஸை கொலை செய்த நபரை கைது செய்யக் கோரி, அவரது உறவினா்கள் ராஜதானி காவல் நிலையம் முன்பாக ஆண்டிபட்டி வேலப்பா் கோயில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, குற்றவாளியை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.