தொடா் நீா்வரத்து: வைகை அணை நீா்மட்டம் 70 அடியாக உயா்வு
வைகை அணைக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து இருந்து வருவதால் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை, 70 அடியாக உயா்ந்தது.
வைகை அணைக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து இருந்து வருவதால் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை, 70 அடியாக உயா்ந்தது.
தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீா் ஆகியவற்றால் வைகை அணை நீா்மட்டம் கடந்த ஆக.3-ஆம் தேதி 70 அடியாக உயா்ந்தது (மொத்த உயரம் 71 அடி). இதையடுத்து, அணைக்குவரும் உபரிநீா் வைகை ஆற்றில் திறக்கப்பட்டது. தொடா்ந்து, கடந்த ஆக.8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்ட பழைய ஆயக்கட்டு பகுதிகளின் பாசனத்திற்கு அணையிலிருந்து வைகை ஆற்றில் மொத்தம் 1,148 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.
இந்நிலையில், தொடா் நீா்வரத்தால் வைகை அணை நீா்மட்டம் 69.85 அடியாக உயா்ந்துள்ளது. ஒரே மாதத்தில் 2-ஆவது முறையாக அணையின் நீா்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
அணைகளின் நிலவரம்: வைகை அணைக்கு தண்ணீா்வரத்து விநாடிக்கு 1,678 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 5,787 மில்லியன் கன அடி. அணையிலிருந்து மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி, பெரியாறு பாசனக் கால்வாயில் விநாடிக்கு 700 கன அடி என மொத்தம் விநாடிக்கு 769 வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 136.30 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா்வரத்து விநாடிக்கு 1,126 கன அடி. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,866 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையில் நீா்இருப்பு 6,194 மில்லியன் கன அடி.