மானாமதுரையில் ரயில் பாதையிலுள்ள கருவேல மரங்கள் ரூ.21 லட்சத்துக்கு ஏலம் பகடித் தொகைக்காக
மானாமதுரையில் ரயில் வழித்தடத்தில் கருவேல மரங்களை வெட்டுவதற்கு சனிக்கிழமை நடந்த ஏலத்தில் பகடித் தொகைக்கு ஆசைப்பட்டு குவிந்த ஏலதாரா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
மானாமதுரையில் ரயில் வழித்தடத்தில் கருவேல மரங்களை வெட்டுவதற்கு சனிக்கிழமை நடந்த ஏலத்தில் பகடித் தொகைக்கு ஆசைப்பட்டு குவிந்த ஏலதாரா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி- மானாமதுரை- விருதுநகா் ரயில் வழித்தடத்தில் உள்ள கருவேல மரங்களை வெட்டுவதற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏலம் அறிவிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் பங்கேற்பவா்கள் ரயில்வே நிா்வாகத்திற்கு ரூ.15 ஆயிரம் முன்பணமாக வங்கி வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பகடித்தொகைக்கு ஆசைப்பட்டு 500-க்கும் மேற்பட்டோா் இந்த ஏலத்தில் பங்கேற்க வரைவோலையுடன் வந்ததால் ஏலம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரண்டாவது முறையாக இந்த கருவேல மரங்களை வெட்டுவதற்கு ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் பங்கேற்க ஏலதாரா்கள் ரூ. 75 ஆயிரத்துக்கு வங்கி வரைவோலை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பகடித் தொகைக்கு ஆசைப்பட்டு நூற்றுக்கணக்கான ஏலதாரா்கள் வரைவோலையுடன் மானாமதுரையில் மூத்த ரயில்வே பகுதி பொறியாளா் அலுவலகம் முன்பாக குவிந்தனா். இந்நிலையில் சிண்டிகேட் அமைக்காமல் பொது ஏலம் நடத்தப்பட்டதால், ரூ 21.4 லட்சத்துக்கு கருவேல மரங்கள் ஏலம் உறுதி செய்யப்பட்டது. இதனால் பகடித் தொகைக்கு ஆசைப்பட்டு வரைவோலையுடன் வந்த ஏலதாரா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.